பாறுக் ஷிஹான்.
பட்டப்பகலில் வீதியில் சென்ற 72 வயதுடைய வயோதிபப் பெண்ணின் கழுத்திலிருந்த நாலரைப் பவுண் பெறுமதியான தங்கமாலையை வழிப்பறி செய்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற சந்தேக நபர் உட்பட இருவர் சம்மாந்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (21) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வீதியால் சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் விரைவாகப் பின்தொடர்ந்தவர்கள், அவரது கழுத்திலிருந்த நாலரை பவுண் பெறுமதியான தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்றதாக பொலிஸாருக்கு சம்பவம் நடைபெற்ற மறுநாள் (22) முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
சம்மாந்துறைப் பொலிஸிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபரைக்கைது செய்யும் நடவடிக்கையில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின்படி அம்பாறை - கல்முனைப் பிராந்திய பதில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்னவின் ஆலோசனையினூடாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜயலத்தின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா, உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் தலைமையில் சென்ற சார்ஜன்ட் ஆரியசேன (24893), கன்டபிள்களான துரைசிங்கம் (40316) ஜகத் (74612) குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த நடவடிக்கையின் போது, வழிப்பறி நடைபெற்ற வீதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா காணொளியினை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடு பொலிஸாரால் அடையாளங்காணப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
இதன் போது, முதலில் சந்தேக நபர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடையொன்றில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
கடை உரிமையாளரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை தனது நண்பரான அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடைக்கு விற்பனை செய்ததாகக் கூறினார்.
புலனாய்வு நடவடிக்கையைத் தொடர்ந்த சம்மாந்துறைப் பொலிஸார் கல்முனை, சாய்ந்தமருது உள்ளிட்ட 6 இடங்களிலுள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் இடங்களில் வழிப்பறிக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்பட்டிருந்ததை அறிந்தனர்.
இறுதியாக, சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் விற்பனை செய்த கடையை அணுகிய பொலிஸார் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டனர். எனினும், குறித்த மோட்டார் சைக்கிளானது, ஆரம்பத்தில் கொள்முதல் செய்தவரின் முகவரியே காணப்பட்டது.
தொடர்ந்தம் முயற்சி செய்த பொலிஸ் குழு மோட்டார் சைக்கிளின் இவ்வருடத்திற்கான காப்புறுதி அட்டை தொடர்பில் விசாரணை முன்னெடுத்து, அதிலுள்ள தொலைபேசி இலக்கத்தை அடிப்படையாக வைத்து சந்தேக நபரின் முகவரியைப் பெற்று சந்தேக நபரின் வீட்டைச்சோதனை செய்து வழிப்பறிக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதுடன், உரிமையாளர் கைதானார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து மோட்டார் சைக்கிளினை தனது உறவினர் 3 நாட்களுக்கு முன்னர் இரவலாக எடுத்துச்சென்றதாக பொலிஸாரிடம் குறிப்பிட்டார். மோட்டார் சைக்கிளை இரவலாக வாங்கிய சந்தேக நபரது வீட்டுக்குச்சென்ற பொலிஸார் சந்தேக நபரைக்கைது செய்ததுடன், களவாடப்பட்ட 4 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியுடைய தங்க நகையையும் மீட்டனர்.
அத்துடன், குறித்த சம்பவத்தில் கைதாகிய சந்தேக நபர்களான 30 வயதுடைய மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மற்றும் 34 வயதுடைய தங்க நகையைப் பறித்துச்சென்ற சந்தேக நபரும் இன்று (24) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியில் இரு சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், மற்றைய சந்தேக நபர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மேலும் இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் 6 உரிமையாளர்களிடம் கைமாறப்பட்டுள்ளதுடன், ஆரம்பத்தில் குறித்த மோட்டார் சைக்கிளினை வாங்கிய நபரது பெயரிலேயே மேற்குறித்த 6 தற்காலிக உரிமையாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். இதில் ஆரம்பத்தில் மோட்டார் சைக்கிளை வாங்கியவர் வெளிநாட்டில் உள்ளார். இதனால் இச்சம்பவத்தில் பொலிஸார் பெரும் சவாலை எதிர்கொண்டு சந்தேக நபர்களைக்கைது செய்தனர்.
இனி வருங்காலங்களில் மோட்டார் சைக்கிளை கொள்முதல் செய்பவர்கள் மோட்டார் வாகனத் திணைக்களத்தில் 14 நாட்களுக்குள் தத்தமது சொந்த முகவரிக்கு மாற்றியமைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.