நூருல் ஹுதா உமர்,
கல்முனை பொலிஸ் பிரிவை மூடும்படி கல்முனை பிக்கு ஒருவரும் கல்முனை மாநகர சபையின் சில தமிழ் உறுப்பினர்களும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன், கல்முனை மேயர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் மேற்படி பிக்குவின் கருத்தை ஏற்று கல்முனை பொலிஸ் பிரிவை மூடியிருந்தால் கல்முனை லொக்டவுனில் இருக்கும் போது முஸ்லிம்களின் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தவிர்த்திருக்கலாம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கல்முனை பொலிஸ் பிரிவு என்பது நீலாவணை முதல் சாய்ந்தமருது வரையாகும். இதனால் முழு கல்முனையும் முடங்கப்படும் என்பதாலும் அனைத்து பகுதியிலும் பொலிசும் இராணுவமும் பாதுகாப்பு வழங்கியிருக்கும் என்பதால் கொள்ளைச்சம்பவம் நடந்திருக்காது.
ஆனால் கல்முனை பஸாரை ஒட்டிய வடக்கில் கல்முனை தமிழ் பகுதி, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை முழுவதாக திறந்து விட்டு வாடி வீட்டிலிருந்து லொக் டவுன் அறிவித்தலை ஏன் செய்தார்கள் என்பதை டொக்டர் சுகுணம் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மேற்படி கொள்ளை கல்முனை மாநகர சபை தமிழ் உறுப்பினர்களுக்கு தெரிந்து, திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பதையும் அதிகாரிகள் ஆராய வேண்டும்.
கல்முனை மாநகரை அல்லது கல்முனை வடக்கு தமிழ் பகுதியை மட்டுமாவது முடக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரசின் கல்முனை மேயரிடம் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், கல்முனை வடக்கை முழுவதும் முடக்காமல் கல்முனை முஸ்லிம் பகுதியையும் சில தமிழ் பகுதியையும் மேயர் முடக்கியது ஏன்?
தமிழ் மக்கள் கேட்டுக்கொண்டதால் அவர்கள் பகுதியை முடக்குவது நியாயம். முஸ்லிம்கள் எவரும் தமது பகுதியை முடக்க கோரவில்லை. இந்த நிலையில் கல்முனை மேயரின் இந்த முடிவு தான் தோன்றித்தனமான முடிவா? கல்முனை முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் இல்லாத அனாதைகளா? இது விடயத்தில் கல்முனை தொகுதி எம் பி ஹரீசும், கல்முனையை ஆளும் மு.காவின் தலைவரும் மௌனமாக இருப்பது ஏன்? அது மட்டுமல்லாது இது விடயங்களை பேசாமல் கல்முனை மாநகரசபையின் முஸ்லிம் காங்கிரசின் மேயர், முஸ்லிம் உறுப்பினர்கள் மௌனமாக இருப்பது ஏன் என்பதும் தெளிவு படுத்தப்பட வேண்டும் என்றார்.