Ads Area

முஸ்லிம் ஜனாஸா விவகாரம்: ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கும்.

COVID தொற்றால் மரணிக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸா நல்லடக்க விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகுமாறு சுகாதார தரப்பிடம் கோரியுள்ளதாகவும் அது தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பினர்.

இதன்போது, ஜனாஸாக்களை மாலைத்தீவிற்கு அனுப்புவது தொடர்பிலான தற்போதைய நிலைமை என்ன என ஊடகவியலாளர்கள் வினவினர்.

அது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டல்களின் படியே இந்த விடயம் தொடர்பில் செயற்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் மீண்டும் மீளாய்வு செய்யுமாறு அண்மையில் பிரதமர் சுகாதார தரப்பிடம் கோரியுள்ளார். உலகின் நிலைமை மற்றும் ஏனைய சுகாதார விடயங்களை ஆராய்ந்து அவர்கள் எதிர்வரும் நாட்களில் தீர்மானத்தை அறிவிப்பர். நாட்டில் COVID கட்டுப்பாட்டிற்காக பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து சுகாதார தரப்பினர் பெரும் அர்ப்பணிப்புகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு அந்த கௌரவத்தை வழங்குவதுடன், அவர்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைக்கின்றோம். முஸ்லிம் மக்களின் பிரச்சினை தொடர்பில் உரிய முறையிலும், மனிதாபிமான முறையிலும் அணுகுமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே, அவர்கள் இது தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து நிலைப்பாட்டை அறிவிப்பர் என ரமேஷ் பத்திரண கூறினார்.

NewsFirst.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe