Ads Area

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பலத்த மழை - வெள்ள நீரால் மக்கள் கடும் சிரமம்.

பாறுக் ஷிஹான்.

அம்பாறை மாவட்டங்களின் கடந்த 3 தினங்களாக பலத்த மழைபெய்துகொண்டுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் நடவடிக்கையும் ஸ்தம்பித்துள்ளது. 

நேற்று மாலை ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று அதிகாலை முதல் பலத்த மழையாக மாறி வருவதுடன் வானம் இருள் சூழந்து மப்பும் மந்தாரமுமாக காணப்படுகின்றது.

குறிப்பாக பெரிய நீலாவணை ,மருதமுனை ,நற்பிட்டிமுனை ,கல்முனை, சாய்ந்தமருது ,மாளிகைக்காடு ,காரைதீவு ,நிந்தவூர் ,அட்டப்பளம் ,பாலமுனை ,அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று ,சம்மாந்துறை ,சேனைக்குடியிருப்பு ,நாவிதன்வெளி ,அன்னமலை, சவளக்கடை, மத்திய முகாம், உகண ,உள்ளிட்ட பகுதிகளில் அடைமழை பெய்வதுடன் இதனால் மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மழையினால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேநேரம் மழை வீழ்ச்சி இடைவிடாது பெய்து வருகின்ற நிலையில் நீர்நிலைகள் யாவும் நீரால் நிரம்பியுள்ளதுடன் சில தாழ்நில நெற் செய்கை வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது .பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது.

இதே வேளை கல்முனை பகுதியில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசியதில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.திடீரென்று குறித்த பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

பிரதான மின் கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தடைப்பட்ட மின் இணைப்பை மின்சார சபையினர் சீர் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளமையும் இந்நிலை நீடித்தால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe