(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கொரேனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (10) சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் உரையாற்ற எழும்பிய தமிழ் தேசிய மக்கள் கூட்டணி உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், கொவிட்டில் மரணிப்பவர்களின் இறுதிக்கிரியை தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வழிகாட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் மரணிப்பவர்களின் உறவினர்களின் விருப்பத்தின் பிரகாரம் தகனம் செய்யவும் முடியும். அடக்கம் செய்யவும் முடியும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும் எமது நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டலில் தகனம் மாத்திரமே செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் வழிகாட்டல் நாட்டின் சிறுபான்மை இனங்களான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் மத உரிமையை மீறியுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் பிரகாரம் உயிரிழந்தவர்களின் உடலை எரிப்பது பாரிய பாவமான விடயமாகும். இது எமது அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் மத உரிமையை மீறும் செயலாகும்.
மேலும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைப்புச் செயலாளர் ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அடக்கம் செய்யவும் அனுமதி வழங்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோன்று, இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நான்கு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறிருந்தும் அரசாங்கம் ஏன் சிறுபான்மை இனத்தவர்களின் மத உரிமைக்கு இடமளிக்காமல் தான்தோன்றித்தனமான தீர்மானங்களை எடுக்கவேண்டும். இந்த சட்டத்தை ஏன் மாற்ற முடியாமல் இருக்கின்றது என்றார்.
நன்றி-மெட்ரோ நியூஸ்