ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை போன்று, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வாகனங்களிலும் மூன்று நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போன்று, டாக்ஸிகளில் வாகன ஓட்டுனரையும் சேர்த்து மொத்தம் 3 நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களாக இருந்தால் மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது வரை இந்த விதிமுறைகள் அமலில் இருந்து வரும் நிலையில், துபாயில் டாக்ஸிகளில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்த்தப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், மூன்றாவது பயணி 14 வயது அல்லது 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, டாக்ஸி டிரைவருக்கு அடுத்த இருக்கை காலியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து RTA வெளியிட்டிருக்கும் செய்தியில், “நீங்கள் டாக்சிகளில் பயணம் செய்தால், இப்போது உங்கள் குழந்தையுடன் (14 வயது வரை) வாகனத்தில் மூன்றாவது பயணிகளாக டிரைவருக்கு அடுத்த இருக்கையைப் பயன்படுத்தாமல் செல்லலாம். மூன்று வரிசை இருக்கும் குடும்ப வாகனத்தில் (டாக்ஸி வேன்) அதிகபட்சமாக அங்கீகரிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை மறு அறிவிப்பு வரும் வரை 4 ஆகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல், RTA மற்றும் கரீம் (Careem) இடையேயான கூட்டு முயற்சியான ஹலா (Hala) வழியாக பயணத்தை முன்பதிவு செய்தால் துபாய் டாக்ஸி வேன்களில் மொத்தம் நான்கு பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டன. வேன்களில் பயணிகளுக்கான இரண்டு வரிசை இருக்கைகளில் ஒவ்வொன்றிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக ஒரு வரிசைக்கு இரண்டு பயணிகள் என மொத்தம் நான்கு பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த டாக்ஸி வேன் சேவைக்கான கட்டணமாக வழக்கமான டாக்ஸி சேவைக்கான கட்டணமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நன்றி - Khaleej Tamil.