சம்மாந்துறை அன்சார்.
இலங்கை அரசும், சுகாதாரத் துறையும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணிக்கும் உடல்களை தகனம் செய்யும் விடையத்தினை கண்டித்து இலங்கையில் வாழும் முஸ்லிம்கள், கிரிஸ்தவர்கள் மற்றும் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் பழக்கம் கொண்ட சிங்களவர்கள் மற்றும் இந்துக்கள் அனைவரும் இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கையினை விமர்சித்து வருகின்ற அதேவேளை பல்வேறு எதிர்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸினால் மரணிப்பர்களை அந்தந்த மத விவகாரங்களுக்கு ஏற்ப அடக்கம் செய்ய முடியும் என்றும் அதனால் எந்தவித சுகாதாரப் பாதிப்போ, நோய்த் தொற்றோ ஏற்படாது என்றும் உலக சுகாதார ஸடதாபனமே வழிகாட்டியிருக்கிறது அதனை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்றி வரும் நிலையில் இலங்கையில் மாத்திரம் மரணித்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாது தகனம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இதனால் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் மார்க்க கடமையினைப் பின்பற்றும் இலங்கைவாழ் முஸ்லிம்கள் மற்றும் கிரிஸ்தவர்கள் பாரிய பிரச்சினைகளையும், கவலையினையும், மன உளைச்சலையும் சந்தித்து வருகின்றனர்.
அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த 20 நாளே ஆன பிஞ்சுக் குழந்தையும் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக வலுகட்டாயமாக எரிக்கப்பட்டிருந்தமை பல்வேறு விமர்சனங்களையும், அதிர்வலையினையும் ஏற்படுத்தியிருந்தது.
கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய் அனுமதி கேட்டு இலங்கை அரசிடம் பல்வேறு பட்ட கோரிக்கைள் முன்வைக்கப்பட்டும், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்படும் இதுவரை எவவித சாதக முடிவுகளும் எட்டப்படவில்லை இதனால் மக்கள் ஆங்காங்க பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 20 நாளே ஆன குழந்தை தகனம் செய்யப்பட்டதற்குப் பிற்பாடு எதிர்ப்பும் நடவடிக்கை மேலும் வலுப்பெற்று வருகின்றது.
தற்போது இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் தங்களது வீடுகளில், வேலைத்தளங்களில் கபன் சீலை கட்டும் அதாவது மரணித்த உடலைச் சுற்றும் வெள்ளை நிற சீலையின் சிறு துண்டு ஒன்றினை பொது இடங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்களில் கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் இந்த "கவன் சீலை போராட்டம்" எனும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா உட்பட பொதுமக்கள் பலரும் இனம் , பிரதேசம் கடந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் கூட இத்தகைய சாத்வீகப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், கபன் சீலை கட்டும் நடவடிக்கைகளில் அனைவரும் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டும் வருகின்றனர்.