Ads Area

34 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முத்தான அதிபர் முகையதீன் முஸம்மில்.

(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பெண்கள் மற்றும் ஆரம்பப் பிரிவிற்கு பொறுப்பான அதிபர் முகையதீன் முஸம்மில் (B.Com, PGDE, SLPS-1) அவர்கள் தனது 34 வருட கால கல்விச் சேவையிலிருந்து  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24-01-2021) ஓய்வு பெறுகின்றார்.

நல்லதொரு கல்விப் புலமை கொண்ட குடும்பத்தில் இப்றாலெப்பை முகையதீன், முஹம்மது இஸ்மாயில் சாபிறா உம்மா தம்பதிகளுக்கு 1961/01/25ஆம் திகதி இரண்டாவது மகனாகப் பிறந்த அதிபர் அவர்கள் தனது ஆரம்ப மற்றும் இடை நிலைக் கல்வியினை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் பெற்றதுடன்  சிறந்த கல்வித் திறமையால் உயர் தரத்தில் சித்தியடைந்து தனது 19வது வயதில் 1980ஆம் ஆண்டு பேராதனைப்  பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி வணிகத்துறையில் பட்டம் பெற்றார்.

ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளான சித்தி ஜெஸிறாவை கரம் பிடித்து ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சிறந்த தந்தையாகி அவர்களையும் கல்விப் புலத்தில் சிறந்து விளங்க அயராது பாடுபட்டு வெற்றியும் கண்டார். 

1987ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில்  இணைந்து கொண்டு  கல்முனை மஹ்மூத் பாலிகா பெண்கள் கல்லூரியில் தனது முதல் நியமனத்தை பெற்று 07 வருட காலம் சிறந்த ஆசிரியர் பணியை ஆற்றினார்.

பின்னர் 1993ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று பெரியநீலாவணை புலவர் மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் கடமையாற்றினார்.  அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு நற்பிட்டிமுனை,

அல்-அக்ஸா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று அங்கு இரண்டு வருடங்கள் கடமையாற்றிய நிலையில் மீண்டும் 1996ஆம் ஆண்டு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்து கல்விப்பணி ஆற்றிய நிலையில் 1998ஆம் ஆண்டு கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்து மாணவர்களுக்கு கல்வித் தாகம் தீர்க்கும் நேரத்தில் 2001ஆம் ஆண்டு கல்முனை அல்-பஹ்ரியா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தனது ஆசிரியர் பணியை செவ்வனே நிறைவேற்றிய நிலையில் 2005ஆம் ஆண்டு இப்பாடசாலையில் உயர் தர மாணவர்களுக்கு வர்த்தகப் பிரிவை ஆரம்பிப்பதற்கு அயராது பாடுபட்டு வெற்றியும் கண்டார். இப்படியாக மாணவர்களின் உயர்ச்சியில் பங்களிப்பு செய்து மாணவர் மனங்களில் முத்தாகத் திகழ்ந்தார். 

மீண்டும் 2009ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்றத்தின் போது மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் இணைந்து தனது ஆசிரியர் பணியினை சிறப்பாக செய்யும் வேளையில் அவரின் திறமைகளை கண்ட அதிபர் கா.பொ.த.சாதாரண பிரிவுக்கான பகுதித் தலைவர் பொறுப்பைக் கொடுத்த போது தனது பணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் காட்டினார்.

03/10/2012ஆம் ஆண்டு தரம்-11 அதிபர் சேவையில் நியமனம் பெற்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராகவும், பெண்கள் மற்றும் ஆரம்பப் பிரிவுக்கு பொறுப்பான அதிபராகவும் கடந்த 08 வருட காலமாக சிறப்பாக கடமையாற்றிய நிலையில் 01/01/2020ஆம் ஆண்டு தரம்-1க்கு அதிபர் சேவையில் தகுதி பெற்றார்.

இவரின் பொறுப்பு அதிபர் சேவைக்காலப் பகுதியில் பல சவால்களை எதிர் கொண்டு அல்-மனார் மத்திய கல்லூரியின் கல்வி வளர்ச்சி, பௌதீகவள அபிவிருத்தி மற்றும்  ஏனைய செயற்பாட்டிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பு செய்து வந்துள்ளதுடன் குறிப்பாக பெண்கள் ஆரம்பப் பிரிவின் கல்வி வளர்ச்சியிலும் பெளதீகவள அபிவிருத்தியிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பை வழங்கியமையினால் பாடசாலையின் அபிவிருத்தி சபையிலும் பெற்றோர் மத்தியிலும் சிறந்த நன்மதிப்பைக் கொண்டிருந்தார்.

குறிப்பாக தனது அயராத முயற்சியின் ஊடாக கல்விப் பணிமனை, பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் போன்றோரின் ஒத்துழைப்பின் மூலம் பெண்கள் மற்றும் ஆரம்ப பிரிவில்  கனிஷ்ட பேன்ட் வாத்தியக் குழு, முதலுதவிக் குழு, சுற்றாடல் கழகம், விஞ்ஞான ஆய்வு கூடம், நூலகம் மற்றும் கணணிக் கூடம்  என்பவற்றினையும் உருவாக்கியதுடன் மாணவர்கள் இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமைகளை மேலோங்கச் செய்ய பூரண ஒத்துழைப்பையும் ஒத்தாசைகளையும் வழங்கி வந்தார்.

இதன் மூலம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 2016ஆம் ஆண்டு 35 மாணவர்கள் ஒரே தடவையில் சித்தி பெற வழிகாட்டியதுடன் 2019ஆம் ஆண்டு கா.பொ.த.சாதாரண பரீட்சையில் பெண் மாணவிகள் சிறப்பான சித்திகளைப் பெறுவதற்கு துணை நின்றது.

மாத்திரமல்லாமல் தமிழ்த் தின, ஆங்கிலப் போட்டிகளில் மாணவிகளை பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களில் வெற்றி பெறவைத்து தேசிய மட்டத்துக்கு அனுப்பி முதலிடம் பெற வைத்து பலரை தங்கப் பதக்கம் பெற வழி சமைத்தார். இப்படியாக அல்-மனார் மத்திய கல்லூரியின் சகல வளர்ச்சிக்கும் தனது முழுமையான பங்களிப்பினை தனது சேவைக் காலத்திற்குள் வழங்கி எல்லோர் மனங்களிலும் முத்தாக இருந்து வருகிறார் முகையதீன் முஸம்மில் அதிபர் அவர்கள்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe