உண்மையில் நடந்ததென்ன...??
அண்மையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறை காரியாலயத்தில் கடமை புரியும் பெண் ஒருவருக்கு கடந்த வெள்ளிக் கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதனை அடுத்து சுகாதார பாதுகாப்புக் கருதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறை மாவட்ட பிராந்திய காரியாலயமான சம்மாந்துறைக் காரியாலயத்தில் கடமை புரியும் பொறியிலாளர்கள், உத்தியோகத்தர்கள் என 26 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நான்கு ஆண் உத்தியோகர்கள் மற்றும் ஒரு பெண் உத்தியோகத்தர் என 5 பேருக்கு Positive இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் குறித்த 5 பேரும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் பாலமுனை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 4 ஆண் உத்தியோகத்தர்களும், மருதமுனை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஒரு பெண் உத்தியோகத்தருமாக 5 பேரும் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதே போல் குறித்த 5 பேரோடும் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் அவர்களது நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர்களும் சுகாதார வழிமுறைகளுக்கு ஏதுவாக தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இது இவ்வாறிருக்க,
ஊருக்குல் இவர்களை வைத்து சிலர் புது புரளி ஒன்றை கிளரி விட்டிருக்கின்றனர் அதாவது குறித்த 5 பேரும் வெளியூரிலிருந்து கொரோனாவினை சம்மாந்துறைக்குல் அள்ளிக் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்றும், அவர்களது பிள்ளைகளும் கொரோனா தொற்றோடு பாடசாலை வந்திருக்கலாம் பாடசாலைகளிலும் இவர்களால்தான் கொரோனா பரவியுள்ளது என்ற சலசலப்பை சில விஷமிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதன் காரணமாகவே இவர்களது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இதனைக் கேள்வியுற்ற பெற்றோர்கள் பீதியில் உறைந்து நேற்று பாடசாலையினை நோக்கி படையெடுத்து பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் சொல்லையும் மீறி தங்களது பிள்ளைகளை வலுகட்டாயமாக பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்கள். சில பெற்றோர் பாடசாலை நிர்வாகத்தோடு வாக்குவாதங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.
கொரோன தொற்று ஒருவருக்கு ஏற்படுவதானது தேசதுரோக குற்றமோ, தெய்வீக குற்றமோ கிடையாது அது யாருக்கும் எந்த நேரத்திலும் ஏற்படலாம் இதனால் கொரோனா தொற்று ஏற்பட்டர்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்கள் ஆகி விடுவார்களா..?? அவர்கள் சமூக துரோகிகள் ஆகிவிடுவார்களா...?? அவர்கள் சமூகத்தின் சாபங்களா...?? இல்லவே இல்லை ஆனால் சிலர் அவர்களை அவ்வாறே நோக்குகின்றனர். அவர்களை ஓதுக்கி வைக்கும் அளவுக்கும், எள்ளி நகையாடும் படியும், அவர்கள் கொரோனாவை சம்மாந்துறைக்குல் அள்ளிக் கொண்டு வந்தவர்கள் என்ற ரீதியிலும் வசைபாடுவது எந்த வகையில் நியாயம்...? இது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை விடவும் அவர்களை மனரீதியாக மிகவும் காயப்படுத்தும் செயலாகும். கொரோனா Positive ஆன 5 பேரில் ஒருவர் என்னோடு தொடர்பு கொண்டு விளக்கமளிக்கையில்,
“எங்களுக்கு கொரோனா Positive ஆனதையடுத்து நாங்கள் மிகப் பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டோம் பிறகு சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் எங்களை பாலமுனை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல அம்புயூலன்ஸ் வாகனம் வந்த போது எங்கள் வீட்டை கூட்டம் கூட்டமாக பலர் முற்றுகையிட்டு தேவையில்லாத மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பேசினர், எங்களை சமூக துரோகிகளாக, தீண்டத் தகாதவர்களாக பேசினர், ஏதோ மாபெரும் சமூகத் தவறை செய்ததாக எள்ளி நகையாடினார்கள் மேலும் எங்களது பிள்ளைகளையும் கேவலமான நிலையிலேயே சிலர் பார்த்தனர், பாடசாலைகளிலும் இவர்களால் கொரோனா பரவியிருக்கலாம் எனவும் சந்தேகக் கண்கொண்டு எங்களை நோக்குகிறார்கள் இது கொரோனாவை விடவும் எங்களது மனங்களை மிகவும் காயப்படுத்தி விட்டது” எனத் தெரிவித்தார்.
கொரோனா Positive ஆன 5 பேரும் சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் பணிபுரிபவர்கள் எமது ஊரில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் கடமை புரியும் இவர்கள் ஊருக்கான நீர் வழங்கள் விடையத்தில் மிகுந்த சிரமங்களை சந்தித்து பல பணிகளை செய்து சேவையாற்றியவர்கள் அப்படியானவர்களை அவர்களுக்கு Positive என்ற ஒரே காரணத்தினால் அவர்களை தீண்டத்தகாதவர்களாக சித்தரித்து அவர்களது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலை வரையிலும் வதந்திகளைப் பரப்பி நேற்று ஊரையே பரபரப்பில் ஆழ்த்தியதில் சிலர் எதைத்தான் சாதித்து விடப் போகின்றார்கள்...??
கடந்த வருடம் முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததினால் எமது மாணவர்களின் கற்றச் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டு தற்போது பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான வீண் வதந்திகளைப் பரப்பி, பெற்றோர்கள் மத்தியில் வீணாண அச்சத்தினை ஏற்படுத்தி மீண்டும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இடை நிறுத்துவதினால் நமது பிள்ளைகளின் கல்விதான் பாதிப்படையப் போகின்றது என்பதை மனதில் இறுத்திக் கொள்ளுங்கள். அது மட்டுமல்ல நமது ஊரில் இவ்வாறு கொரோனா, கொரோானா என பரவலாக பீதியினையும், வதந்தியினையும் கிழப்பிவிடுவதினால் அக்கறைப்பற்று, கல்முனை, காத்தான்குடி போன்று நமது ஊரும் சுகதாரத் துறையினராலும், பாதுகாப்புப் படையினரினாலும் நாள் கணக்கில் முடக்கப்படலாம் அதனால் ஏற்படும் சிரமங்களையும் நாமே அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் மனதில் இறுத்திக் கொள்ளுங்கள். ஆகவே பெற்றோர்களே...!! வீணாண வதந்திகளை நம்பி உங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாது விட்டு அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி விடாதீர்கள். பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான எந்தவித முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை இது பொய்யான தகவல் என சம்மாந்துறை சுகாதார அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் என அனைவரும் தெரிவித்துள்ள நிலையில் ஏன் இந்த அச்சம்.
ஒரு விடையம் தொடர்பிலான உண்மை வெளிவருவதற்கு முன்னர், பொய்யானது செருப்பை மாட்டிக் கொண்டு ஊரெல்லாம் சுற்றி வந்துவிடும் என்று சிலர் சொல்வார்கள் அப்படித்தான் இருந்தது நேற்றைய சலசலப்பு.