Ads Area

மருதமுனையில் தனியார் தொலைபேசி விற்பனை நிலையமொன்று உடைக்கப்பட்டு கைத்தொலைபேசிகள், பணம் என்பன திருட்டு.

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

தனியார் தொலைபேசி விற்பனை நிலையமொன்று  திருடர்களால் உடைக்கப்ட்டு மீள்நிரப்பு அட்டைகள், கைத்தொலைபேசிகள், பணம் என்பன களவாடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை பிரதான வீதியிலுள்ள தனியார் தொலைபேசி விற்பனை நிலையத்திலேயே இன்று (21) அதிகாலை  இத்திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இத்திருட்டுச் சம்பவத்தில் இருவர் ஈடுபட்டுள்ளனர். திருடர்கள் தனியார் தொலைபேசி விற்பனை நிலையத்தினையே முழுமையாக உடைத்து திருடிச் சென்றுள்ளதுடன், ஏனைய கடைகள் உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பலனளிக்காமையினால் அவர்கள் கொண்டு சென்ற இரும்பு வெட்டும் உபகரணத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் துவிச்சக்கர வண்டியொன்றில் வருகை தருவதும், ஆள் அடையாளம் தெரியாத படி உரப்பையினால் முகங்களை முடி இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதை அருகேயுள்ள வர்த்தக நிலைய கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.

இப்பகுதியில் கடும் மழை பெய்த நிலையில் இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் கல்முனைப் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதைக் காண முடிந்தது.

குறித்த தனியார் கைத்தொலைபேசி விற்பனை நிலையத்தில் 30 கைத்தொலைபேசிகள், 55 ஆயிரம் ரூபா பணம், பல்வேறு தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பன திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வர்த்தகர் தெரிவித்தார்.

மேலும், மேற்குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe