Ads Area

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது - சரத் பொன்சேகா

வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இலங்கை மக்களுக்கான நியாயத்தை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கம் வரையில் தாம் ஓயப்போவதில்லை என்றும் , அதற்காக பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில்  கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது ,

வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் இந்நாட்டு உழைக்கும் மக்களே , நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுத்தவர்கள்.

அரசாங்கம் தற்போது அதனை மறந்து செயற்பட்டு வருகின்றது. ஆளும்தரப்பு அமைச்சர் ஒருவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் எமது மக்களை வெடிகுண்டு என்றும் தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் எத்தகைய முயற்சிiயும் இதுவரையில் எடுக்கவில்லை.

தேர்தலின் போது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அரச மரியாதையுடன் இந்த வெளிநாட்டு பணியாளர்களை அழைத்து வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காது உள்ளனர்.

வெளிநாட்டு பணியாளர்கள் இன்று பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். அவர்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வரையில் நாங்கள் அமைதியாக இருக்கபோவதில்லை.

இவ்விடத்தில் நாம் மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்திலேயே நாம் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளோம். தேர்தலை நோக்காக கொண்டு அல்ல.

பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியதாவது வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இந்நாட்டு தொழிலாளர்கள் , இன்று தொழில் எதுவும் இன்றி பாதிப்படைந்துள்ளனர்.

அவர்களுக்கு அங்கு போதிய உணவு , நீர் , மருத்துவம் என்பன கிடைப்பதில்லை. இவர்களது நிலைமைத் தொடர்பில் அரசாங்கத்திற்கு புரியாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு தாய்மார்களை அழைத்து வருவதற்காக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்திடம் அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் , வரிப் பணத்தை அல்லது வெளிநாட்டு உழைக்கு மக்களின் நிதியத்தை பயன்படுத்தியாவது அவர்களை நாட்டுக்கு அழைத்துவருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான்

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் கூறியதாவது ,கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டுக்கு திரும்ப முடியாமல் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் இந்நாட்டவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

சிலர் முகாம்களிலே உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலுக்கு மத்தியில் அவர்களை அழைத்து வருவதற்கான வாய்ப்பு இருந்தும் அரசாங்கம் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருக்கின்றது. எமது நாட்டில் மாத்திரமே சொந்த நாட்டுக்கு வருவதற்காக இலஞ்சம் கொடுக்கவும் , பேரணியில் நிற்கவும் ,போராட்டங்களில் ஈடுபடவும் வேண்டியுள்ளது.

இந்நிலையில் அவர்களிடமிருந்து மேலும் பணம் பறிப்பதை நிறுத்தி விட்டு , அவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

Thanks - Virakesry.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe