நூருல் ஹுதா உமர்
மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் இந்த சபைக்கு மக்கள் தம்மை பிரதிநிதியாக அனுப்பியது மக்களுக்கு கெடுதி செய்ய அல்ல என்றும் வலியுறுத்தி மாவடிப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்பு கோபுரம் தொடர்பில் வாதாட சட்டத்தரணியை மக்களின் வரிப்பணத்தில் இருந்து கட்டணமாக செலுத்தி வழக்காட நியமிக்க அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்து காரைதீவு பிரதேச சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தனர்.
காரைதீவு பிரதேச சபையின் 37 வது அமர்வு இன்று காலை (24) தவிசாளர் கி. ஜெயசிறிலின் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்ற போதே இந்த சம்பவம் பதிவானது. இது தொடர்பில் மேலும் அறியவரும் விடயம் யாதெனில், கே.ஏ. ரஹீம் என்பவரால் கல்முனை மேல்நீதிமன்றத்தில் மாவடிப்பள்ளியில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் அமைத்தலுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தொலைத்தொடர்பு கோபுர நிர்மாணிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதேச சபை நிர்வாகத்தை தொடர்புபடுத்தியுள்ளதால் இந்த வழக்கில் ஆஜராக சட்டத்தரணியை நியமிக்க சபை அமர்வில் பிரேரணை முன்வைக்கப்பட்டு பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது புற்றுநோய் உண்டாக்கும் தன்மை, மலட்டுத்தன்மை, சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் தொலைத்தொடர்பு கோபுர நிர்மாணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மேற்கூறிய காரணங்களை முன்வைத்தும் சகல முஸ்லிம் உறுப்பினர்களும் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர். இருந்தாலும் பெரும்பான்மையாக இருந்த தமிழ் உறுப்பினர்கள் ஏழ்வரும் தமது ஊரின் பிரமுகர்களின் ஆலோசனைக்கு அமைவாக ஆதரவாக வாக்களித்தவுடன் பிரேரணை 02 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணையானது கடந்த அமர்வில் நிராகரிக்கப்பட்டிருந்ததுடன் மீண்டும் இந்த அமர்வில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் மாளிகைக்காடு பிரதேச கடற்கரை வீதி சந்தியில் சுற்றுவட்டம் நிர்மாணித்து பெயர்ப்பலகை அமைக்கும் பிரேரணையை முன்வைத்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.என்.எம்.றணீஸ் ஆமோதிக்க மற்றைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில் எதிர்த்தார். இதன்போது பலத்த வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று பிரதித்தவிசாளரின் வேண்டுகோளின் படி இப்பிரேரணை வாக்கெடுப்புக்கு வந்தது. இந்த பிரேரணையானது 08 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றது. இந்த பிரேரணைக்கு எதிராக தவிசாளர் கி. ஜெயசிறில், உறுப்பினர் ஜெயராணி, உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில் ஆகிய மூவரும் மட்டுமே எதிர்த்தனர். (ஒரு உறுப்பினர் சபையின் இடையில் வெளியேறி சென்றுவிட்டார்.) மிகப்பெரும் சலசலப்புடன் நடந்து முடிந்த இந்த சபை அமர்வில் இது போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது.