Ads Area

ரமலான் மாத இப்தார் கூடாரங்களுக்கான அனுமதிகளை ரத்து செய்த துபாய்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய முயற்சிகளுக்கு ஏற்ப துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (The Islamic Affairs and Charitable Activities Department, ICAD) இந்த ஆண்டு அமீரகத்தில் ரமலான் கூடாரங்களுக்கான அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்துள்ளது.

தொற்றுநோய் பரவலின் போது சமூக இடைவெளி போன்ற விதிகளை மக்கள் மீறக்கூடிய வகையில் நடைபெறும் பெரிய கூட்டங்களைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று ICAD தெரிவித்துள்ளது.

ரமலான் எனும் புனித மாதத்தில், மசூதிகளில் தொழிலாளர்களுக்கான சமூகக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, இப்தாரின் போது அவர்களுக்கு இலவச உணவை வழங்குவது வழமையாக நடைபெறும் நிகழ்வாகும். இருப்பினும், கொரோனா பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய அறிவுறுத்தல் படி, பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் அகமது தர்விஷ் அல் முஹைரி அவர்கள் கூறுகையில், “புனித மாதத்தில் இலவசமாக உணவுகளை விநியோகிக்க ஏராளமான மக்கள் மற்றும் அமைப்புகள் முன்வருகின்றன. எனினும், அவர்கள் ICAD ஒப்புதல் மற்றும் உரிமம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் இன்ன பிற நிறுவனங்களுடன் இணைந்து மட்டுமே செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், “ICAD பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. வரவிருக்கின்ற ரமலான் மாதம் பாதுகாப்பாக கடந்து செல்வதை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரமலான் மாதத்தில் டிஜிட்டல் மீல்ஸ் ஆஃப் ஹோப் (Digital Meals of Hope) எனும் திட்டத்தின் மூலம் ஆணையம் தொடர்ந்து தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் என்று ICAD-யின் தொண்டு நிறுவனங்கள் துறையின் இயக்குனர் முஹம்மது முசாபே தாஹி கூறியுள்ளார்.

செய்திக்கு நன்றி - https://www.khaleejtamil.com/



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe