தேய்ந்த டயர்களைக் கொண்ட வாகனங்களை அடையாளம் காண தொடங்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவத்தார்.
உள்ளூர் சந்தைகளில் டயர்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் காரணமாகவே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாராந்திர அமைச்சரவை கூட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடுகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள டயர்களின் தேவை மற்றும் டயர்களை இறக்குமதி செய்வதற்கான தேவை குறித்து அரசாங்கம் ஆய்வு செய்யும்.
இந்த அம்சங்களை மறுபரிசீலனை செய்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை தேய்ந்த டயர்களை கண்காணிப்பதற்கான சிறப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேய்ந்த டயர்களையுடைய வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதற்கு பதிலாக புதிய டயர்களை பொருத்துமாறும் பொலிஸார் அண்மையில் அறிவித்திருந்தனர்.
இந் நிலயைில் வியாபார நிலையங்களில் டயர் தட்டுப்பாடு காணப்படுவதனால் அந்தந்த வாகனங்களுக்குப் பொருத்தமான டயர்கள் வியாபார நிலையங்களில் இல்லை என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள பலர் தெரிவித்தனர்.
தேவையான டயர்கள் வியாபார நிலையங்களுக்கு வந்தடைந்ததன் பின்னர் இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு அகில இலங்கை சாரதி பயிற்சிப் பாடசாலை உரிமையாளர்களின் தேசிய சங்கமமும் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.