நோன்பு முடியும் வரை சமூக வலைத்தளங்கள் பக்கம் போவதில்லை என்று கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன். அதை கண்டிப்பாக கடைப்பிடித்தும் வந்தேன். ஒரு முறை சார்ஜ் செய்தாலே மூன்று நாட்கள் போனை பாவிக்க முடிந்தது என்றால் பாருங்களேன்!. இருந்தாலும் தற்போது வருகின்ற செய்திகளின் படி, நமது அயல் நாடான இந்தியா மிகத் தீவிரமான கொரோனா இரண்டாம் அலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது. அந்த கவலையின் நீட்சி, நமது நாடும் மெல்ல மெல்ல அது போன்ற ஒரு நிலைக்கு மாறிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் வல்லரசு என்ற பிம்பம் கலைக்கப்பட்டு அதன் பொதுச் சுகாதார கட்டமைப்பில் உள்ள கிழிசல்கள் சர்வதேச சமூகத்தின் முன் நிர்வானம் ஆக்கப்பட்டிருக்கின்றது. பெரும் தொற்று ஒன்றை சமாளிப்பதில், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அரசாங்க முடிவுகளில் அறிவியலும், விஞ்ஞானமும் தாக்கம் செலுத்தாத போது எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இப்போது இந்தியா உதாரணமாக மாறி இருக்கிறது. கொவிட் முதலாவது தொற்று ஏற்பட்டு ஒரு வருடங்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் இந்திய தலைநகரமே திண்டாடுகிறது என்ற செய்தி மட்டுமே பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்கிறது. பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு, உலகளாவிய தொற்று ஒன்றுக்கு எதிராக எந்தவித முன்னாயத்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதையே இது புலப்படுத்துகிறது. மொத்தத்தில், விஞ்ஞான, அறிவியல் முறமைகளைத் தாண்டி கொவிட் தொற்றை அரசியல் சாயம் பூசி, மதவாதம் பேசி கேலியும் கிண்டலுமாக்கி, விளக்கேற்றி, கைதட்டி, ஊர்வலம் போய், பூசைகள் செய்து தடுத்துவிடலாம் என்று நினைத்த அரசாங்கத்தின் முகத்தில் காறி உமிழ்ந்து, அவர்களின் அன்டர்வயரையும் கழட்டி தொங்கப் போட்டிருக்கிறது இந்த புதிய வேரியண்ட் கொரோனா வைரஸ்.
கொரோனாப் பெரும் தொற்று சீனாவில் தொடங்கிய காலம் முதல், அது பண்டமீக் ஆக மாறிய போதிலிருந்தும் இது குறித்து விழிப்புணர்வு ஊட்டி, எச்சரிக்கை செய்த போதெல்லாம் அதை மறுதலித்தவர்கள், நம்பாதவர்கள் சொன்ன மிகவும் பெரிய காரணம் இந்தியா. ஹீலர்களின், அஞ்ஞான ஆர்வலர்களின் ஆதார்ஷமாக, பொக்கிஷமாக இருந்த ஒரு நாடு தான் இந்தியா. 'உலகிலே இவ்வளவு தொற்றுக்கள் இருக்கும் போது இந்தியாவில் ஏன் ஒன்றுமில்லை?' "இந்தியாவில் கொரோனா வந்தவர்களுக்களுக்கெல்லாம் அது வெறும் தடுமல் காய்ச்சல் போலத்தானே இருக்கிறது?" 'இது மருத்துவ மாபியாவின் பித்தலாட்டம், பார்த்தீர்களா நம்மவர்களின் நோய் எதிர்ப்புத் திறனை?' இப்படி ஆயிரம் ஆயிரம் காரணங்கள். ஆயிரமாயிரம் சப்பைக்கட்டுகள். அப்போது அவர்களுக்கெல்லாம் அன்று சொன்ன ஒரே பதில் உங்களுக்கு தற்போது வந்த கொரோனா வெறும் ட்ஸீர் மட்டும் தான், இன்னும் மெய்ன் பிக்ச்சர் வந்து சேரவில்லை என்பது தான். அது இப்போது உண்மையாகி இருக்கிறது.
உலகில் ஒரு பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் தனது பொதுமக்கள் தற்போது முகக் கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்திருக்கிறது. அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் தமது இரு நாடுகளுக்குமிடையில் போக்குவரத்து செய்பவர்கள் தனிமைப்படுத்தல் இருக்கத் தேவையில்லை என்று அறிவித்திருக்கின்றன. இப்படி ஆரம்பம் முதலே, உலகளாவிய ஒரு பெரும் தொற்றை விஞ்ஞான முறைமைகளை பயன்டுத்துவதனூடாக மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிய நாடுகள், அவைகளை கொஞ்சமும் தயங்காமல் கடந்த ஒரு வருடமாக கனகச்சிதமாக செயல்படுத்திய அரசுகள் தற்போது பெருமூச்சு விட தொடங்கியிருக்கின்றன. தெளிவான இலக்குடன் கடந்த ஒரு வருடத்தையும் பயன்படுத்தியதன் விளைவாக இந்த நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்துகின்ற அளவிற்கு முன்னேறி இருக்கின்றன.
இந்தியா நமக்கு அண்ணன் போல, நமக்கு அவர்களை போலவே சீதோஷன நிலை, அவர்களை போலவே உடல்வாகு, அவர்களை போலவே உணவு பழக்க வழக்கம், அதுவுமில்லாமல் அவர்களை போலவே அரசியலும். கடந்த ஒரு வருட காலமாக நமது நாடும் விஞ்ஞான ரீதியான தடுப்பு நடவடிக்கைகளை விட்டு விட்டு; அச்சுப் பிசகாமல் அண்ணனைப் போலவே கொரோனா பாணி செய்வதிலும், முட்டி எறிவதிலும், ஜனாஸா எரிப்பதிலுமே தங்கள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருந்தனர். விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளை விட அரசியல் ரீதியான, மத ரீதியான, பொருளாதார ரீதியான ஆதாயங்களுக்கே இங்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் பலன் மெல்ல மெல்லத் தெரியத் தொடங்கியிருக்கிறது.
ஆக மொத்தத்தில் நமது நாட்டில் வருகின்ற புதிய கொரோனா அலை அண்ணனைப் போல இல்லாமல் வேறு யாரைப் போலவும் இருக்குமா என்ன?
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்
ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று.