பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
மாறுபடுத்தப்பட்ட அல்லது திரிவு படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தை உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த கொரோனா வைரஸானது, அதிகமானோரை தாக்கும் வீரியம் கொண்டுள்ளதுடன், மிக வேகமாகப் பரவுகின்றதாக காணப்படுவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நேற்று (24) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்ததாவது,
மாறுபடுத்தப்பட்ட அல்லது திரிவு படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தை உருவாக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த கொரோனா வைரஸானது அதிகமானோரைத் தாக்கும் வீரியம் கொண்டுள்ளதாகவுள்ளது.
மிக வேகமாகப் பரவுகின்றதாகக் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் காணப்பட்ட கொரோனா வைரஸானது, ஒருவரிலிருந்து இருவருக்கு பெரும்பாலும் பரவுவதாக இருந்துள்ளது.
தற்போதுள்ள கொரோனா வைரஸானது, நான்கு முதல் ஐவர் வரை பரவக்கூடிய ஏதுநிலையில் காணப்படுகின்றது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள விஞ்ஞானபூர்வமான தகவல்களின்படி சளித்துணிக்கைகள் காற்றில் ஒன்றரை மணித்தியாலம் வரை தங்கி நிற்கக்கூடிய சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.
ஆகவே, நோயாளி ஒருவர் அவ்விடத்தில் வந்து நின்று தும்மி விட்டுச் சென்று விட்டால் ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் இன்னுமொருவர் அவ்விடத்திற்கு வந்தால் கூட அந்த நோய் தொற்றுவதற்குரிய ஏது நிலை காணப்படுகின்றது.
ஆகையால், மக்கள் இதில் விழிப்படைந்தவர்களாக அதிகளவு மக்கள் சேர்கின்ற இடங்களுக்குச் செல்வதை முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டும். முகக்கவசங்களைச் சரியான முறையில் தொடர்ச்சியாக அணிய வேண்டுமென்பது தான் எமது எதிர்பார்ப்பாகும். கடந்த காலங்களில் பல தரப்பினரிடம் இருந்தும் கொரோனா தடுப்பு விடயத்தில் ஒத்துழைப்புகளை நாம் பெற்றிருந்தோம்.
உண்மையில் பொலிஸார், இராணுவம், பொது நிர்வாக அமைச்சின் கீழான அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், உள்ளுராட்சி சபை, மாநகர சபை பிரதேசயினருடன் எமது சுகாதாரப் பிரிவினர் இணைந்து பணியாற்றியிருந்தார்கள்.
இந்த விடயத்தில் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது.
இலங்கையில் கொரோனாவினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு காரணம் ஊடகங்களாகும். அந்த வகையில், நேற்றுக்கூட இந்த பிரதேசத்திற்குரிய இராணுவத் தளபதியுடன் ஒரு கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டிருந்தேன்.
சுகாதார விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தித் தருவதற்கு இராணுவத்தின் உதவியை நாடியிருந்தேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நேற்று நீங்கள் அனைவரும் அறிந்திருக்க முடியும். கல்முனை, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகவே இருந்தது. ஆகவே, ஏற்கனவே இந்த நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து விட்டார்கள்.
கொரோனா வைரஸானது உலகலாவிய ரீதியில் 3வது அலையினை ஏற்படுத்தியுள்ள இத்தருணத்தில், எமது அண்டை நாடான இந்தியா இந்த நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றுக்குள்ளாவதும் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்து வருவதும் அவதானிக்க முடிகின்றது.
அதனுடைய பிரதிபலிப்பு இலங்கையிலும் காணப்படுகின்றது. கடந்த இரண்டு வாரங்களாக சித்திரைப் புதுவருட கொண்டாட்டத்தின் பின்னர் இவ்வைரஸ் தொடர்பில் இலங்கையில் அதீத உயர்ச்சி காணப்படுகின்றது.
அந்த வகையில், இலங்கையில் நாளொன்றிற்கு 200 பேர் தான் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
இப்பொழுது 900, 1000 பேர் பாதிக்கப்பட்டு வருவது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
5, 6 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் (23) கல்முனை பிராந்தியத்திலும் நாங்கள் பிசிஆர் அறிக்கையின் பிரகாரம் 9 தொற்றாளர்களை அடையாளம் கண்டிருந்தோம்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும், பொத்துவில் பிரதேசத்திலிருந்து 2 பேருமாக இந்த பிராந்தியத்தில் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பல நாட்களாக பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான எமது பிராந்தியத்தில் ஒருவருமே இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தாலும், நேற்று திடீரென கண்டுபிடிக்கப்பட்ட 9 பேரின் நிலையைக் கொண்டு எமது பிராந்தியத்தின் அபாய நிலைமையை உணர முடிகின்றது.
ஆகவே, எமது சுகாதார சேவை இணைந்த சேவைகள் இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையில் மிகத்தீவிரமாக நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.
அதன் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறும். இதற்கு மக்களின் பூரண ஒத்தழைப்பு எமக்குத் தேவை.
முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளைக் கழுவுதல், ஒன்று கூடுவதைத் தவிர்த்தல் போன்ற நான்கு விடயத்தில் உங்கள் ஒத்துழைப்பு எமக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றது என்றார்.