பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
கொரோனா வைரஸ் தாக்கத்தை உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விடுமுறை காலத்தில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பரவலைத் தடுப்பதற்கு ஒத்துழைப்புகளை வழங்குங்கள் என கல்முனை பிராந்திய தொற்றுநோய்த்தடுப்பு அதிகாரி வைத்தியர் என்.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நேற்று (24) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் கொரோனா தொற்று நிலைமை அதிகரித்துக் காணப்படுகின்றது. கல்முனை பிராந்திய தொற்றுநோய்த்தடுப்பு அதிகாரி வகையில் எமது பிராந்தியமும் விழிப்புணர்வுடன் இருக்கின்ற கட்டாயத்திலுள்ளது.
கடந்த காலங்களில் எமது பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகவும் சிறப்பாகச் செய்து கட்டுப்படுத்தியிருந்தோம்.
கடந்த கொரோனா அலையின் போது அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகளவில் ஆரம்பமாகி ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருந்தது.
தற்போது எமக்கு கிடைத்த தகவலின்படி அதே இடத்திற்கு அருகாமையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ளவர்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் நோன்புப் பெருநாட்கள், விசேட தினங்கள் வருவதனால் பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். எமது பிராந்தியத்திலுள்ள ஆலயங்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், விகாரைகள் போன்ற தலங்களுக்குப் பொறுப்பானவர்கள் நிருவாகத்தினர் பொதுமக்களை வழிநடத்த வேண்டும்.
கடந்த வருடம் எமது பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டங்களினூடாக பிரதேசங்களை மூடுதல் (லொக்டவுன்) நிலைமை எமக்கு எதிர்வரும் காலங்களில் வராமலிருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புத் தேவையாகவுள்ளது.
சுகாதாரத் தரப்பினர்களின் கடமையில் அசௌகரியங்களை ஏற்படுத்தாது, ஒத்துழைப்புகளை வழங்குங்கள். எமது பிராந்தியத்தில் உயிர் கொல்லியாகவுள்ள கொரோனாவினைத் தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
சுகாதாரத் தரப்பினர்கள் இரவு பகல் பாராது மக்களது பாதுகாப்பிற்காகவே செயற்படுகின்றார்கள். ஆகவே, பொதுமக்கள் புத்திஜீவிகள் சுகாதாரத் தரப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.
கடந்த காலம் இடம்பெற்ற நிலைமை வராமலிருப்பதற்கு சகலரும் செயற்பட வேண்டும்.
முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளி தொடர்பில் முக்கிய கவனமெடுக்க வேண்டும். தற்போது பண்டிகைக்காலம் ஆகையினால் வியாபாரதலங்களில் கூட்டம் கூடுவதை அதன் உரிமையாளர்கள் தடுப்பதற்கு முயற்சியுங்கள்.
இவ்வாறு நெருக்கடியாக இருக்கின்ற இடத்திற்கு கல்முனை பிராந்திய நடமாடும் பரிசோதனை வண்டி சென்று அங்கு அன்டீஜன் பரீசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் பொசிட்டிவாக இருக்கின்ற தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
பொதுமக்கள் தற்போதைய விடுமுறைக் காலத்தில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பரவலைத் தடுப்பதற்கு ஒத்துழைப்புகளை வழங்குங்கள்.
திருகோணமலை, குருநாகல் மாவட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து கொள்ளுங்கள். இதன் மூலம் எமது பகுதிக்குள் கொரோனா வைரஸ் உள்நுழைவதைத் தவிர்த்து கொள்ளலாம். இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்புகளை எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.