Ads Area

போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம்.

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான டிப்போ வேறிடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும், அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான டிப்போவை அங்கேயே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை வாழ் மக்கள் நேற்று திங்கட்கிழமை (5) அச்சாலைக்கு அண்மையில் திரண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டாக்டர் ஐ.எல்.ஏ.மஜீத் உட்பட இளைஞர்கள் பலரும் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போது, 

இந்தப்போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாவும், அரசியல்வாதிகள் பலரும் தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக எங்களை ஏமாற்றுவதாகவும், அதனால் அவர்களை நம்பாது தொடர்ந்தும் தீர்வு கிட்டும் வரை அவ்விடத்திலையே போராட்டத்தைத் தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அரச உயர்மட்டம் முதல் குறித்த இலாக்காவுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் வரை பேசியிருந்தும் இவ்விடயம் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான டிப்போவை அங்கேயே நிரந்தரமாக வைக்குமாறு கோரி இதற்கு முன்னரும் இரு வேறு போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், தற்போது  மூன்றாவது தடவையாக இச்சத்தியாக்கிரகப் போராட்டம்  உரிய முடிவு வரை தொடரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், பிராந்தியத் தலைவர்கள் எனப் பலரையும் விழித்து எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக அறிவித்துள்ளனர். 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மிகப்பெரிய பிரதேசமான சம்மாந்துறைக்கு அந்த டிப்போ இருப்பதன் மூலம் பல நன்மைகள் இருப்பதாகவும், இந்த இடத்திலிருந்து அந்த டிப்போ அகற்றப்படுவதனால் சம்மாந்துறை பொதுமக்கள் கடுமையான போக்குவரத்து நெருக்கடியை அனுபவிப்பதாகவும் பெண்கள், பாடசாலை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் கடுமையான  அசௌகரியங்களை அனுபவித்து வருவதாகவும் கருத்துக்களை வெளியிட்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe