Ads Area

வெளியாகியுள்ள கடிதம் தொடர்பில் அகில இலங்கை சூபி தரீக்கா அமைப்பு மறுப்பு.


சம்மாந்துறை அன்சார்.

இலங்கையில் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய சட்டமா அதிபர்  அனுமதி வழங்கியுள்ளதை அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடம் வரவேற்று சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியினை முன்னாள் அமைச்சரும், ஆளுனருமான அலவி மௌலானாவின் மகனான அகில இலங்கை சூபி தரீக்கா அமைப்பின் தலைவர் செய்யித் நகீப் மெளலானா மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் சம்மாந்துறை24 இணையத்தளத்திற்கு தெரிவிக்கையில்,

எங்களது அகில இலங்கை சூபி தரீக்கா அமைப்பின் பெயரில் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக முகநுால் மற்றும் இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியினைக் கண்டு உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். இது போன்ற எந்தவிதமான கடிதத்தை நானோ அல்லது எங்களது அமைப்பின் ஏனைய உறுப்பினர்களோ எழுதவுமில்லை, யாருக்கும் அனுப்பவுமில்லை, இந்தக் கடிதத்திற்கும் எங்களுக்கும் எதுவித சம்பந்தமுமில்லை. இது யாரோ வேண்டுமென்று எங்கள் மீது  சேறு பூசுவதற்காக எங்களது அமைப்பின் பெயரில் பிரசுரித்துள்ள போலியான கடிதமாகும்.

இந்தக் கடிதம் போலியானது என்பதற்கு அதில் குறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டு திகதியே போதுமானதாகும். குறித்த கடிதத்தில் ஆங்கில வருடத் திகதியாக 07-04-2021 என்று சரியாகவும், ஹிஜ்ரி ஆண்டுத் திகதியாக 21ம் நாள், ரபியுல் அவ்வல் (Rabī‘ al-awwal) மாதம், 1442 எனப் பிழையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய ஹிஜ்ரி ஆண்டுத் திகதி Shaʻban 25, 1442 ஆகும்.

எங்களது அகில இலங்கை சூபி தரீக்கா அமைப்பு ஏனைய அமைப்புக்கள் விடையத்தில் கொள்கை ரீதியில் முரண்பாடான கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஏனைய அமைப்புக்கள் தடை செய்யப்படும் பொழுது அதனை மகிழ்வோடு வரவேற்கும் மனநிலையில் நாங்கள் ஒருபோதும் இருப்பதில்லை.

ஆகவே...தற்போது எங்களது அமைப்பின் பெயரில் உலா வந்து கொண்டிருக்கும் குறித்த கடிதத்திற்கும் எங்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதனை உறுதிப்படத் தெரிவித்துக் கொள்வதோடு, இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடும் செய்ய இருக்கின்றோம் எனவும் அகில இலங்கை சூபி தரீக்கா அமைப்பின் தலைவர் செய்யித் நக்கீப் மௌலான தெரிவித்துள்ளார்.


சூபி தரீக்கா அமைப்பின் தலைவர் நக்கீப் மௌலானாவின் தொலைபேசி இலக்கம் - 0774511333






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe