Ads Area

வீதியோர வியாபார நிலையங்கள் நிறுத்தப்படாவிடின் போராடத்தயார் .

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கொரோனா அனர்த்த காலங்களில் தற்காலிகமான ஏற்படுத்தப்பட்ட வீதியோர வியாபார நிலையங்கள் எதிர்வரும் காலங்களில் நிறுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு நிறுத்தத்தவறும் பட்சத்தில் கல்முனை பொதுச்சந்தை மட்டுமல்லாது கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து சந்தை வர்த்தகர்களும் ஒன்றிணைந்து இதற்கெதிரான போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கச் செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க அலுவலகத்தில் இன்று (21) மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்,

கொரோனா அனர்த்தத்தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் சிறப்பாக முன்னெடுத்துள்ளது. அதற்காதரவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணனும் எம்முடன் தொடர்பு கொண்டு அடிக்கடி கொரோனா அனர்த்தம் தொடர்பில் பல கருத்தரங்குகளையும் நடாத்தியுள்ளார்கள். 

கொரோனா அனர்த்தம் ஆரம்பம் முதல் இன்று வரை இந்த பொதுச்சந்தையினுள் கொரோனா நோய் தாக்கிவிடக்கூடாது என்பதில் மிக கவனமாகச் செயற்பட்டிருந்தோம்.

தற்போது 3வது அலையாக எம்மைத் தாக்க முயற்சிக்கின்ற கொரோனா அனர்த்தத்தை நாம் முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம்.

அந்த வகையில், எமது தொடர்ச்சியான சுகாதார வழிமுறைகள் நாளுக்கு நாள் நாங்கள் மீண்டும் மீண்டும் பல யுத்திகளைப் பயன்படுத்தி கை ஒலிபெருக்கி மூலம் தொடர்ச்சியாக வர்த்தகர்களுக்கும் இங்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய வருகை தரும் நுகர்வோருக்கும் பல அறிவுறுத்தல்களை கொடுத்து கொண்டிருக்கின்றோம்.

இன்று வரை எமது சந்தையை அண்டிய கடைகளில் சுகாதார நடைமுறைகள் பேணப்படுகின்றது. கைகழுவுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இங்கு மிக வேதனையாக விடயம் யாதெனில், கடந்த கொரோனா இரண்டாம் அலையின் போது எமது சந்தை ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த வேளை எமது வர்த்தகர்கள் எதுவித வாழ்வாதரம் அற்றவர்களாக காணப்பட்டனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்காக பல தரப்பினருடன் கலந்துரையாடிய வேளை சிலரின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு எமது சங்கத்தினரால் நன்கொடை உதவி மேற்கொள்ள முடிந்தது.

தற்போது கூட எமது சந்தையின் வியாபாரம் குறைவடைந்துள்ளதைச் சுட்டி காட்டவிரும்புகின்றேன்.  கொரோனாவினால் எமது சந்தை ஒரு மாதகாலமாக மூடப்பட்டிருந்த நிலையில், கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும்  வீதியோரங்களிலும் தற்காலிக விற்பனை நிலையங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

இருந்த போதிலும், இதனால் தற்போது பாரிய விபத்துக்களும் சன நெரிசலும் ஏற்பட்டு வீதிப் போக்குவரத்து பிரச்சினை எழுந்துள்ளது.

ஆகவே, இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து வீதியோர வியாபார நடவடிக்கைகளும் நிறுத்த வேண்டும்.

அது மட்டுமல்லாது, பொருட்களை வாகனங்களில் எடுத்துச்சென்று ஊர்களுக்குள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு சுகாதார நடவடிக்கைக்கு கேடாக நடக்கின்ற வியாபாரங்கள் உடனடியாக நிறுத்தப்பட கல்முனை மாநகர முதல்வர், கல்முனை பிராந்திய சேவை பணிப்பாளர் எமக்கு உதவ முன்வர வேண்டும்.

அவர்கள் எமது வாழ்வாதாரத்தை கருத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில், கௌரவமாக வாழ்ந்த எமது வர்த்தகர்கள்  நாளுக்கு நாள் கடனாளியாகத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏனெனில், நாம் சந்தையிலிருந்து மாநகர சபைக்கு வரிகளைச் செலுத்திக் கொண்டு நாங்கள் வருமானமற்ற நிலையில் இருக்கின்றோம்

எனவே, கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து சந்தை வியாபாரம் முன்னெற வீதியோர வியாபார நடவடிக்கைகளை கல்முனை மாநகர முதல்வர் ஆணையாளர், சுகாதார சேவைப் பணிப்பாளர், பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் கல்முனை ஆணையாளரிடம் பல தடவை கூறி இருந்தும், எதுவித பலனுமின்றி வேதனை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, எதிர்வரும் காலங்களில் வீதியோர வியாபாரங்கள் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் நிறுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு நிறுத்தத் தவறும் பட்சத்தில் கல்முனை பொதுச்சந்தை மட்டுமல்லாது கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து சந்தை வர்த்தகர்களும் ஒன்றிணைந்து இதற்கெதிரான போராட்டத்தினை முன்னெடுப்பதற்குத் தீர்மானிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe