இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஆக்ஸிஜன் கண்டெய்னர்களை வழங்கி உதவி புரிந்து வருகின்றன. மேலும், சில நாடுகள் இந்தியாவிற்கு உறுதுணையாக இருப்பதாக அறிக்கை விட்டுள்ளன.
இந்நிலையில், குவைத் அமைச்சரவை திங்களன்று நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு மற்றும் இறப்பு அதிகமுள்ள இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது குவைத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புகழ்பெற்ற நட்பு உறவுகளின் கட்டமைப்பிற்குள் வருகிறது என்று கூறியுள்ளது.
கொரோனா வைரஸின் புதிய திரிபு வேகமாக பரவுவதால் இதன் விளைவாக மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறப்புகள் மற்றும் தொற்றுநோய்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலைகளினால், இந்தியாவில் மோசமடைந்து வரும் சுகாதார நிலைமை குறித்து குவைத் அமைச்சரவை தனது ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
Khaleej Tamil.