(காரைதீவு நிருபர் சகா)
இலங்கை போக்குவரத்துச் சபையின் பொத்துவில் உப பஸ் டிப்போவை சகல வசதிகளுடனும் தரமுயரத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம்.எம். முஷரப் முதுநபீன் இதனைத் தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிவரும் பொத்துவிலில் உப பஸ் டிப்போவை பிரதான டிப்போவாக தரமுயர்த்தப்பட வேண்டுமென அமைச்சுசார் ஆலோசனை சபைக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த பஸ் சாலை தரமுயர்த்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் பஸ் டிப்போவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதனை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.
பஸ் டிப்போவுக்கு தேவையான புதிய கட்டடங்களை அமைத்துத் தருமாறும் பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பு நிலையத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொத்துவில் பஸ் சாலை தொடர்பாக முன்வைத்துள்ள சகல கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக அமைச்சுசார் ஆலோசனை குழுக் கூட்டத்தின் போது குறித்த அமைச்சுக் குழுவால் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதாக முஷாரப் எம்.பி மேலும் தெரிவித்தார்.