இந்தியாவில் தீவிரமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே விதிக்கப்பட்ட விமான பயணக் கட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் சிக்கிக்கொண்ட, அமீரகத்தில் தொழில்செய்து வரும் ஒரு இந்திய குடும்பம் அமீரகத்தின் திர்ஹம்ஸ் மதிப்பில் 2 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம்) செலவழித்து தனியார் விமானத்தில் துபாய் வந்தடைந்த சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
அமீரகத்தில் ஷார்ஜாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் அல் ராஸ் எனும் நிறுவனத்தை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீட்டு பெண் திருமணத்திற்காக கேரளாவிற்கு சென்றிருந்த நிலையில், விமான பயண கட்டுப்பாடு காரணமாக அமீரகம் திரும்ப இயலாத சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து வேறு வழியின்றி தங்களின் சொந்த செலவில் ஒரு தனியார் விமான நிறுவனத்தின் பிரைவேட் ஜெட் மூலம் குடும்பத்தினர்கள் அனைவரும் துபாய்க்கு திரும்பியுள்ளனர்.
அமீரகத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக வசித்துவரும் இக்குடும்பதை சார்ந்த, அல் ராஸ் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பி.டி. சியாமலன் இதுகுறித்து கூறுகையில், ஏப்ரல் 25 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது மகளின் திருமணத்திற்காக குடும்பத்தினர் அனைவரும் கொச்சிக்கு சென்றிருந்ததாகவும், திடீரென அறிவிக்கப்பட்ட விமான தடையை தொடர்ந்து அமீரகம் திரும்ப வழி இல்லாமல் பிரைவேட் ஜெட் மூலம் நேற்று வெள்ளிக்கிழமை (மே 7) மதியம் 2 மணிக்கு துபாயில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அல் ராஸ் எனும் அவர்களின் குடும்ப வணிகத்தின் அனைத்து மூத்த நிர்வாகிகளும் கேரளாவில் சிக்கித் தவித்ததால், நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள வேறு எவரும் இங்கு இல்லாத காரணத்தினால் செலவை பற்றி யோசிக்காமல் தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக அல் ராஸ் நிறுவனதின் CEO அஜித் சியாமலன் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் அம்மா, மனைவி போன்ற அனைவரும் முக்கிய பதவிகளில் வகிப்பதாகவும், எனவே இந்தியாவில் இருந்து வணிகத்தை நடத்துவது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தனியார் விமான பயணத்தை ஸ்மார்ட் டிராவல் ஏஜென்சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்ததாகவும் அஜித் சியாமலன் தெரிவித்துள்ளார்.
இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் செலவழித்து கேரளாவின் கொச்சியிலிருந்து துபாய்க்கு வந்த பிரைவேட் ஜெட் விமானம் வெறும் 13 இருக்கைகள் மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி மூலம் - https://www.khaleejtamil.com/