Ads Area

சுற்றுலா விசாவில் அமீரகம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை.

சுற்றுலா விசாவில் அமீரகம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை என சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை மந்திரியும், துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் பொது இயக்குனருமான ரீம் அல் ஹாஷெமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி - இன்னும் அடுத்த 5 மாதங்களில் உலகில் பல மாற்றங்களை காணமுடியும். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. ஒட்டுமொத்தமாக கொரோனா பரவலில் வரும் 5 மாதங்களில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தையும், ஒரு தெளிவான நிலையும் வரும்.

பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் குறைந்து வருவதையும் நம்மால் காணமுடிகிறது. தடுப்பூசி என்பது அனைவரும் ஊக்குவிக்கும் விஷயமாக உள்ளது. எங்கள் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாய கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கட்டாயமில்லை - இதன் மூலம் இயல்பான சூழ்நிலையை மீட்கமுடியும் என நம்புகிறோம். எனவே நாட்டில் வசிப்பவர்கள், குடியிருப்பு விசா பெற்றவர்களை கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துகிறோம். ஆனால் சுற்றுலா விசாவில் வருகை தருபவர்கள், பார்வையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை. அது குறித்த எந்த விதிமுறையையும் நாங்கள் அவர்கள் மீது விதிக்கவில்லை.

தற்போது துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 உலக கண்காட்சிக்கான இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் விமான நிலையத்திற்கு வந்த போது பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. இது மிக விரைவாக ஒரே நாளில் செய்யப்பட்ட பரிசோதனை ஆகும்.

திட்டமிட்டபடி தொடங்கும் - பரிசோதனை முக்கியமானது. ஆனால் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது என்பதுதான் நோய் பரவலை தடுக்கும். நிச்சயமாக வருகிற அக்டோபர் 1-ந் தேதி திட்டமிட்டபடி உலக கண்காட்சியானது தொடங்கும். ரத்து செய்யப்பட வாய்ப்பு எதுவும் இல்லை.

மிக யதார்த்தமாக, நடைமுறை சாத்தியங்களை கவனத்தில் கொண்டு நமது ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் உலக சுகாதாரம் ஆகியவற்றுடன் ஒரு சமநிலையை அடைவதற்கான முயற்சியை ஏற்படுத்தி வருகிறோம். வாழ்வாதாரங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் கொரோனா வைரசுடன் பொறுப்புடன் வாழ கற்றுக்கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe