சம்மாந்துறை ஐ.எல்.எம் நாஸிம்
நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா ஆகியோரின் கண்காணிப்பில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல் றாசிக் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை வர்த்தக சம்மேளன தலைமையிலான இளைஞர் குழு, பாதுகாப்பு படையினர் இணைந்து சம்மாந்துறை பிரதேசத்தில் கொவிட்-19 யினை கட்டுப்படுத்துமுகமாக பொது இடங்களுக்கு நேற்று (05) இரவு திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது சம்மாந்துறை விளினையடி சந்தி, போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக் கவசம் அணியாதோர் என பலரும் நிறுத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதோடு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இத் திடீர் பரிசோதனை நடவடிக்கையானது தினமும் இரவு 10.00 மணிவரை நடைபெற இருப்பதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்ததோடு சுகாதார வழிமுறையை பேணாதோர் மீது கொவிட் 19 பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெசாக் மற்றும் நோன்பு பெருநாள் பண்டிகை காலம் என்பதனால் மக்கள் புத்தாடைகள் மற்றும் பண்டிகை கால கொள்வனவில் சம்மாந்துறை வர்த்தக நிலையங்களில் பரபரப்பாக இயங்கிவருவதனால் சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.