பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்கள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் நேற்று (23) அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.
காலை முதல் மாலை வரை மப்பும் மந்தாரமுமாக இருந்த நிலையில், இடையிடையே சிறிய மழை பெய்து வருகின்றது. கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதுடன், கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடாத்தி வரும் சூழ்நிலையில், வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இது தவிர தற்போது மறுஅறிவிப்பு வரும் வரை வங்களா விரிகுடா மற்றும் நாட்டைச்சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென கடற்படை மற்றும் மீன்பிடிச் சமூகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு, மத்திய வங்காளவிரிகுடாவில் சூழ்ந்துள்ள குறைந்த அழுத்தப்பகுதி தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், திங்கட்கிழமைக்குள் இது சூறாவளியாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாகக் காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, இவ்வாறான காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதனாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இதை விட கடற்கரையோரங்களில் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கொரோனா சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

