சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது பதுருதீன் (23) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக அவர் பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த எல்.இ.டி. டி.வியை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.
அதில் 2 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 1 கிலோ 200 கிராமுள்ள அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.58 லட்சம் என தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், முகமது பதுருதீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.