இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை மரண எண்ணிக்கைகளையும் பாதிப்பு எண்ணிக்கைகளையும் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோரை இழந்து வாடும் சிறு குழந்தைகள் பல இந்தியா முழுதும் கவனிப்பாரின்றி அனாதைகளாகும் கொடூரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தாய் தந்தை இருவரையும் கொரோனாவுக்கு இழந்த குழந்தைகள் அனாதையாகும் சூழ்நிலையில் தாயை மட்டுமோ அல்லது தந்தையை மட்டுமோ இழக்கும் குழந்தைகளை வைத்து கொண்டு நிதியளவிலும், உளவியல் ரீதியாகவும் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
கொல்கத்தாவில் பிறந்த குழந்தை ஒன்று தன் தாய் தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோரை கொரோனாவுக்குப் பறிகொடுத்த கொடூரம் நிகழ்ந்தது. குழந்தைக்கும் கொரோனா பாசிட்டிவ். இதனால் குழந்தையை உறவினர்கள் எடுத்துச் சென்று வளர்க்க தயக்கம் காட்டினர். குழந்தையின் தாய் வழி தாத்தா பாட்டி குழந்தையை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க பத்திரிகை நிருபர் அனுராதா ஷர்மா ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறும்போது, “பிறந்த குழந்தை தன் பெற்றோர், தந்தை வழி தாத்தா பாட்டி ஆகியோரையும் கொரோனாவுக்கு பறிகொடுத்தது. குழந்தைக்கும் பாசிட்டிவ், ஆனால் பிழைத்து விட்டது. தாய் வழி தாத்தா பாட்டி குழந்தையை தயங்கித் தயங்கி எடுத்து சென்றனர், அதுவும் போலீஸ் வற்புறுத்திய பிறகு. கொரோனாவினால் அனாதையான குழந்தைகளின் கண்ணீர் கதை நம்மை வருங்காலத்தில் வருத்தமுறவே செய்யும்” என்றார்.
குழந்தையை எடுத்துச் செல்ல தயக்கம் காட்டும் உறவினர் என்பது தற்காலிகம் தான் என்று கூறும் சமூக ஆர்வலர்கள், நாடு என்ன மாதிரியான மனநிலையை இப்போது மக்களிடத்தில் கொடுத்திருக்கிறது என்பதுதான் முக்கியம் என்கின்றனர்.
கர்நாடகாவில் 2 குழந்தைகள் தங்கள் பெற்றோரை கொரோனாவுக்கு இழந்து ஆதரவில்லாமல் கவனிப்பாரற்று இருக்கும் நிலையை சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினர்.
இன்னொரு கொடுமை என்னவெனில் டெல்லியில் கொரோனாவுக்குப் பெற்றோரைப் பறிகொடுத்த இருவர் தற்கொலைக்கு முயன்றபோது டெல்லி போலீஸார் காப்பாற்றி மீட்டுள்ளனர். இம்மாதிரியான விவகாரங்களில் உறவினர்கள்தான் கைகொடுக்க வேண்டும், அந்த தெரிவு இல்லையெனில் அரசுதான் கைகொடுக்க வேண்டும்.
டெல்லியில் 50 குடிசைப்பகுதிகளில் பணியாற்றும் சமூக ஊழியர் புரொத்சாஹன் என்பவர் கூறும்போது, “தாய், தந்தை இருவரையும் பறிகொடுத்த குழந்தைகள் நிறைய உள்ளனர். இவர்களை தத்து எடுத்துக் கொள்ளும் நடைமுறை தேவை என்கின்றனர், ஆனால் எதிர்கால நன்மைக்காக முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. ” என்றார்.
சமூக ஊடகங்கள் பலவற்றில் கொரோனாவுக்கு தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொள்ள அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், சமூக விரோத சக்திகள் குழந்தைகள் கடத்தல் கும்பல் இந்த நேரத்தில் சுலபமாக குழந்தையை வேறு ஒருவரிடத்தில் தத்து கொடுத்து நாடகமாடி விட்டுச் சென்று விடும், பிற்பாடு சிக்கலில் நிற்க வேண்டியதுதான் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால் அங்கு இதுபோன்று பெற்றோர் இருவரும் கொரோனா சிகிச்சையில் இருந்தாலோ அல்லது இறந்திருந்தாலோ உதவி எண்கள் கொடுத்துள்ளனர், அதைப் பயன்படுத்தவே அறிவுறுத்தப்படுகின்றனர்.
குடிசைப்பகுதிகளில் தாய் தந்தையரை இழந்த சிறுமிகள் பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர் என்று சமூக ஊழியர் புரொத்சாஹன் கூறுகிறார்.
அதே போல் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தின் குழந்தைகளும் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளாவதாக இவர்கள் எச்சரித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்து வாடும் சிறுமிக்கு சிறு வயது என்று பாராமல் திருமணம் செய்து வைத்து அனுப்பும் கொடுமையும் நடந்து வருவதாக சமூக செயல்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.