Ads Area

பாலஸ்தீன மக்களுக்காக ஒத்துழைப்பினை தெரிவிப்போம்.

அல் - அக்ஷா முஸ்லீம் பள்ளிவாசல், காசா துண்டுநிலம் மற்றும் மேற்குக்கரையை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த திங்கள் தொடக்கம் தீவிரமயப்படுத்தப்பட்டுள்ள விமானத் தாக்குதல்கள் மற்றும் ஷெல்வெடித் தாக்குதல்கள் மூலமாக பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற கொடூரமான இஸ்ரவேல் தாக்குதல்கள் மற்றும் கோபத்தை தூண்டுதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இன்றளவில் சிறுவர்களை உள்ளிட்ட பாலஸ்தீனியர்கள் நூற்றுக்கணக்கில் இறந்து ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளதோடு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர்   இடம்பெயர்ந்தும் வருகின்றனர். தற்போது இந்த தாக்குதல் இரண்டாவது வாரத்தை நெருங்கியுள்ளதோடு தொடர்ச்சியாக தாக்குதல் இடம்பெற்றால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.

நக்பா இடம்பெற்று 73 வருடங்கள் கழிந்துள்ள போதிலும் அன்றுதொட்டு பாலஸ்தீனிய மக்கள் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளமை சாதாரண விடயமாக மாறிவிட்டது. பாலஸ்தீன மக்களின் சுதந்திரம், தன்னாதிக்கம் மற்றும் மனித உரிமைகளை மீறுகின்ற  பேரரசுவாதிகளுக்கும் இஸ்ரவேலைப் போன்றே ஐக்கிய அமெரிக்காவின் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கும் எதிராக  பாலஸ்தீன மக்கள் தமது தாயகத்தை மீட்டெடுப்பதற்கான பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.  இதன்போது அவர்கள் தான்தோன்றித்தனமான சிறைத்தண்டனைகள், கைது செய்தல்கள் மற்றும் சித்திரவதைகளை எதிர்கொள்ள நேரிடுவதோடு அவர்களின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் நலனோம்புகை அனைத்தையுமே அவர்கள் இழந்துள்ளார்கள். இஸ்ரவேல் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற இந்த தாக்குதல்கள் பாலஸ்தீனத்திற்கு,   இஸ்ரவேலுக்கு மாத்திரமன்றி ஏனைய மத்திய கிழக்கு நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பினை ஆபத்தில் விழச்செய்வித்தலானது அந்த நாடுகளின் உழைக்கும் மக்களின் மனக்குறைகளுக்கு ஏதுவாக அமைந்துள்ளது. இதன்போது சர்வதேசத்தில் இருந்து விடுக்கப்படுகின்ற அழைப்புகளையும் கோரிக்கைகளையும் பொருட்படுத்தாமல்விட்டு தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொள்வதாக  இஸ்ரவேல் பிரதமர் கூறுகிறார். 

ஐக்கிய அமெரிக்க சனாதிபதி இஸ்ரவேலின் பாதுகாப்பு உரிமை பற்றி பேசுகின்ற அதேவேளையில் கடந்த 73 வருடங்கள் பூராவிலும் இஸ்ரவேல் எந்தளவுக்கு ஆக்கிரமிப்புமிக்கதாக மாறியுள்ளதென்பதற்கு உலகம் சான்று பகர்கின்றது. இஸ்ரவேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இந்த நெருக்கடிக்காக  1967 இல் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையிட்டு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரவேல்  ஆகிய இரண்டு தன்னாதிக்கமுள்ள இராச்சியங்களை  தாபிக்க முன்மொழிந்தது. "1967 தேச எல்லைகள்" கொண்ட இந்த இரண்டு இராச்சியங்களின் தீர்வாக இஸ்ரவேல் அரசாங்கத்துடன் பாலஸ்தீனத்தின் சுயாதீனமான இராச்சியமொன்றை நிறுவுதல் இந்த முரண்பாட்டுக்கான தீர்வாக இன்னமும் நிலவுகின்றது. நிகழ்காலத்தில் இந்த தீர்வினை 140 இற்கு மேற்பட்ட நாடுகளும் வத்திக்கானும் ஏற்றுக்கொண்டுள்ளன. இஸ்ரவேல் அரசாங்கம் இந்த தீர்வினைக் கடைப்பிடியாமையும்  ஐக்கிய அமெரிக்காவை முதன்மையாகக்கொண்ட பேரரசுவாதிகளின் தூண்டுதல்கள் காரணமாகவுமே பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரவேலுக்கும் இடையிலான  நெருக்கடி இன்றளவில் மேலோங்கி இருக்கின்றது. எனவே பாலஸ்தீன மக்களுக்கு நேர்ந்துள்ள பாரிய துன்பங்களுக்கும் சேதங்களுக்கும் மாத்திரமன்றி இஸ்ரவேல் மக்களின் வேதனைகளுக்கும் இஸ்ரவேல் அரசாங்கமும் ஐக்கிய அமெரிக்க பேரரசுவாதிகளுமே பொறுப்புக்கூற வேண்டும்.  

மக்கள் விடுதலை முன்னணி என்றவகையில் நாங்கள் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரவேல் தாக்குதல்களையும் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையிலான பேரரசுவாதிகளின் தலையீட்டினையும்  கடுமையாக கண்டிப்பதோடு பாலஸ்தீன மக்களுக்கு எமது ஒத்துழைப்பினை தெரிவித்துக் கொள்கிறோம்.  நாங்கள் உலகம் பூராவிலும் உள்ள முற்போக்குக் கட்சிகளிடமும் அமைப்புக்களிடமும் பாலஸ்தீனத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுதந்திரமானதும் தன்னாதிக்கமுடையதுமான பாலஸ்தீனத்திற்காக குரல்கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். பாலஸ்தீன நிலப்பரப்பிற்குள் இஸ்ரவேலை உருவாக்கியமை பற்றிய பொறுப்பு ஐக்கிய நாடுகளினதாக அமைவதால் பாலஸ்தீனத்திற்கு எதி்ரான தாக்குதல்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் சுதந்திரமானதும் தன்னாதிக்கம் கொண்டதுமான பாலஸ்தீனத்தை நிறுவ  கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாங்கள் ஐக்கிய நாடுகளிடம் கடுமையாக கேட்டுக்கொள்கிறோம்.  பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான அமைதியான வாழ்க்கையைக் கழிப்பதற்காக பாலஸ்தீனம் தொடர்பாக கொண்டுள்ள மனோபாவத்தை முடிவுறுத்துமாறு இஸ்ரவேலை நிர்ப்பந்திக்குமாறும்  நாங்கள் அமைதியை நேசிக்கின்ற மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன்  அவர்களின் உயிர்களையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அழித்தொழிக்க செயற்படுகின்ற பேரரசுவாதக் கருத்திட்டங்களை தோற்கடிக்க ஒன்றிணையுமாறு   நாங்கள் பாலஸ்தீன மற்றும் இஸ்ரவேல் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

பாலஸ்தீனத்திற்கு எதிரான கொடூரமான தாக்குதலை உடனடியாக நிறுத்து!

சட்டவிரோத தலையீடுகளை உடனடியாக நிறுத்து! 

சுதந்திரமானதும் தன்னாதிக்கம் கொண்டதுமான பாலஸ்தீனத்தை உடனடியாக தாபிதம் செய்!

பேரரசுவாதத்திற்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பு நீண்டகாலம் வெல்லட்டும்! 

மக்கள் விடுதலை முன்னணி

இலங்கை 

2021.05.18



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe