Ads Area

கல்முனைப் பிராந்தியத்தில் வர்த்தக நிலையங்கள் இரவு 7.00 மணியுடன் பூட்டு; பொது இடங்களுக்கு மக்கள் செல்லவும் தடை.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்தியத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் இரவு 7.00 மணியுடன் மூடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை (10) மாலை  சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்பு உயர்மட்டக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த உட்பட முப்படை அதிகாரிகள், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ரமேஷ், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளான டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, டொக்டர் ஆர்.கணேஸ்வரன், டொக்டர் எம்.எம்.அல்அமீன் ரிஷாட் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற சூழ்நிலையில், கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான 13 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைப் பிரிவில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடற்கரைப் பகுதிகள், சிறுவர் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களுக்கு மக்கள் செல்வது எதிர்வரும் ஞாயிறு (30) வரை தடை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வர்த்தக நிலையங்களும் கடைகளும் திங்கட்கிழமை (10) தொடக்கம் அடுத்த 03 நாட்களுக்கு இரவு 7.00 மணியுடன் மூடப்பட வேண்டும்.

பள்ளிவாசல்களில் இரவு நேர கூட்டு வணக்கங்கள் மறு அறிவித்தல் வரை தவிர்க்கப்பட வேண்டும்.

வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற உள்ளூர் வாசிகள் தமது கிராம சேவகர் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிப்பதுடன் றமழான் பெருநாளை தனது வீட்டில் குடும்பத்தினருடன் மாத்திரம் கொண்டாட வேண்டும். ஏனையவர்களுடன் தொடர்புகளை பேணுவதை முற்றாக்கத் தவிர்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மேற்படி தீர்மானங்களை மீறுவோரைக் கைது செய்தல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுத்தல் எனவும் பொலிஸ் மற்றும் முப்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe