பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்த கொரோனா (COVID-19) மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்தல் தொடர்பான திணைக்களத் தலைவர்களுக்ககிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உரையாற்றும் போது,
கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கல்முனைப் பிராந்தியத்திற்குள் இந்த தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கு சகல திணைக்களத் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது ரமழான் பெருநாள் காலமாக இருப்பதால் பொதுமக்கள் ஒன்று கூடுவது அதிகமாகவுள்ளது இதனால் சுகாதார சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
குறிப்பாக, முகக்கவசம் (Mask) அணிவது, சமூக இடைவெளியைப் பேணுவது, கைகளைச் சுத்தமாகக் கழுவுவது போன்ற அடிப்படை விடயங்களைக் கடைப்பிடிப்பது முக்கியமாகும்.
கல்முனை பிராந்தியத்தில் மூன்றாம் அலையின் தாக்கம் இல்லாவிட்டாலும் அம்பாறை, மொன்றாகலை, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் இதன் அலை வேகமாகவுள்ளது.
அரசியல் பிரதிநிதிகள், சுகாதாரத் தரப்பினர்களின் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்யாமல் இந்த நோயின் தாக்கத்தை உணர்ந்தவர்களாகச் செயற்பட வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வளவு விழிப்புணர்வை வழங்க முடியுமோ அவ்வளவுக்கு அதனை வழங்க வேண்டும்.
இந்த தெற்றுநோய் பற்றி சுமார் ஒன்றரை வருடமாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகிறோம். இன்மின்னும் இதனைத் தொடர்ந்து வழங்க முடியாது. மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் முடியுமானளவு பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்வின் இறுதியில் தொற்றுநோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பற்றி திணைக்களத் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தொற்று அதிகமாகப் பரவி வரும் பிரதேசங்களுக்குச் சென்று வருபவர்கள் குறித்து இங்கு அதிகம் கவனஞ்செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய தொற்றுநோய்த்தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகரி கே.எச்.சுஜித் பிரியந்த, பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், இராணுவ கட்டளை அதிகாரி, கடற்படை அதிகாரிகள் என திணைக்களங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.