எம்.எம்.றியாஸ் - 0779059410
அரங்கம் இணையத்தளத்தில் தம்பியப்பா கோபலகிருஸ்ணன் அவர்கள் எழுதிய கட்டுரையினை வாசித்த போது இந்த கட்டுரையினை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது..
பலர் தொடாத பக்கமாகவும் அரசியல் வாதிகள் அடிக்கடி தொடுகின்ற பக்கமாகவும் கல்முனை விவகாரம் காணப்பட்ட போதிலும் தம்பியப்பாவின் கட்டுரையினை வாசிக்கும் போது எழுந்த கேள்விக் கணைகளுக்கு விடை தேடிப் புறப்பட்டேன்...
கல்முனையும் கல்முனைக் குடியும் ஒன்றா வேறுவேறா? ?
தம்பியப்பாவின் கருத்துப்படி கல்முனை என்பது தாளவட்டுவான் வீதியிலிருந்து தரவைப் பிள்ளையார் வீதி வரை எனக் குறிப்பிடுகின்றார். அதற்கு அவர் வைக்கும் ஆதாரம் கிராம சேவக பிரிவுகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள்.
கல்முனைக் குடி என்பது தரவைப் பிள்ளையார் வீதியிலிருந்து ஸாஹிறாக் கல்லூரி வரையானது என்று கூறும் அவர் கல்முனை வேறு கல்முனைக் குடி வேறு என்று சுட்டிக்காட்டுகிறார்.
இந்த விடயமாக முஸ்லீம்கள் தமது வர்த்தகம் செய்யும் பிரதேசம் கல்முனை என்றும் தாம் குடியிருக்கும் பிரதேசம் கல்முனைக்குடி என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்த இரு வேறுபட்ட இரு சமூகத்தவர்களின் கருத்துக்களையும் வரலாற்று ரீதியாகவும் சட்ட ஆவணங்கள் ரீதியாகவும் எடுத்துக் காட்டுக்கள் மூலமாகவும் ஆராய்ந்து பார்ப்போம்.
கல்முனை வஸார் பகுதியில் குடியிருப்புக்கள் பெரிதாக இருக்கவில்லை என்று கூறப்படும் அதேவேளை மக்கள் குடியிருந்த கடற்கரைப் பள்ளிப் பிரதேசத்தில் 1520களில் கடற்கரைப் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டதாகவும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னரே கல்முனை பஸார் பிரதேசத்தினை நோக்கி மக்கள் நகரத்தொடங்கியதாகவும் கல்முனையின் தொண்மை வரலாறு கூறுகிறது.
17ம் நூற்றாண்டில் கல்முனை ஒரு சிறிய குடியேற்றமாகவே காணப்பட்டதாகவும் அக்காலத்தில் கத்தோலிக்கர்கள் பெரும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். இதனை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. மாதா கோயில் மற்றும் கல்முனை மட்டக்களப்பு வீதியில் உள்ள கத்தோலிக்கருக்கு சொந்தமான பெரு நிலப்பரப்பு உவெஸ்லி மிசனரி பாடசாலை கார்மேல் பாத்திமா பெண்கள் பாடசாலை என பல விடயங்களை எடுத்து காட்டாக கூறலாம்.
இதே போன்று முஸ்லீம்கள் வாழும் இடங்களில் தினமும் ஐவேளைத் தொழுகையினை நிறைவேற்றுவதற்காக தங்களுக்கான பள்ளிவாசல்களை அமைத்து வணங்குபவர்களாகக் காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் கல்முனை நகர்பள்ளிவாசல் 1834ம் ஆண்டு பக்கீர் தம்பி மரைக்கார் பிச்சை தம்பி மரைக்கார் ஆகிய இரண்டு முஸ்லிம் பெரியார்களின் காணியிலேயே நிர்மாணித்தனர். இதனை 1854ம் ஆண்டின் PP 294ம் இலக்க வரைபடத்தின் மூலம் கண்டு கொள்ளலாம். அதே வேளை இந்த நகர்பகுதியில் தமிழ் மக்களுக்கான எந்த வணக்க வழிபாட்டு தளங்களும் இன்றுவரை இருக்கவில்லை என்பது வரலாற்றினை தேடிப்பார்க்கின்ற போது புலப்படுகிறது. ஆனாலும் கல்முனை வஸார் பிரதேசத்தில் வர்த்தகம் செய்த இந்தியர்கள் தாங்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கென 1949ம் ஆண்டு தமக்கு பாதுகாப்பானதும் பொருத்தமானதுமான அம்பலத்தடி பிரதேசத்தில் நிர்மாணித்தனர். என வரலாறு நீண்டு செல்கிறது. இந்த வரலாற்றுச் சான்று மூலம் பார்க்கும் போது கல்முனை நகர்பகுதி முஸ்லீங்கள் வசமிருந்திருக்கறது என்றும் அம்பலத்தடிப் பிரதேசமே தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருக்கலாம் எனப் புலப்படுகிறது.
மேலும் 1952ல் இந்தியர் பாக்கிஸ்தானியர் குடிவரவு குடியகல்வு சட்டத்தினை நிறைவேற்றியதன் காரணமாக கல்முனை வசார் பகுதியில் வர்த்தகம் செய்து வந்த இந்தியர்களும் பாக்கி ஸ்தானியர்களை அவர்களது வர்த்தக நிலையங்களையும் நிலங்களையும் உள்ளூர் வாசிகளிடம் விற்று விட்டு தமது சொந்த நாட்டிற்குச் சென்றனர். இதனால் வியாபார நிலையங்களின் பெரும் பகுதி முஸ்லீம்கள் வசமாகியது என்ற வரலாற்று தடயத்தோடு கட்டுரையாளரின் விடயத்திற்கு வருவோம்...
1897.02.19ம் திகதி அரச வர்த்தமானி மூலம் கல்முனைக்கான சனிட்டரி போட் உருவாக்கப்பட்டது. இதில் கல்முனைக்கான எல்லையாக தாளவட்டுவான் வீதியில் இருந்து சாய்ந்தமருது (ஸாஹிறாக் கல்லூரி) வீதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கட்டுரையாளரும் ஏற்றுக் கொள்கிறார் இதனை திட்டமிட்ட சதி என்கிறார். இந்த சனிட்டரி போட் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரின் தலைமையில் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆவணத்தில் ஓரிடத்திலும் தரவைப் பிள்ளையார் வீதி கல்முனைக்கான எல்லையாக குறிப்பிடப்படவில்லை.
1920ல் கல்முனை உள்ளூர் சபை (Local Board) உருவாக்கப்பட்டது. இந்த சபையும் ஏற்கனவே குறிப்பிடும் சனிட்டரி போட்டின் எல்லையையே குறிப்பிடுகிறது. இதில் கூட கல்முனையின் எல்லையாக தரவைப் பிள்ளையார் வீதியினைக் குறிப்பிடவில்லை. இந்த சபையும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரின் தலைமையில்தான் இயங்கி வந்தது.
1946ல் கல்முனை பட்டின சபை உருவாக்கப்பட்டது அப்போதும் கல்முனையின் எல்லையானது தாளவட்டுவானில் இருந்து ஸாஹிறாக் கல்லூரி வீதி வரை வரையறுக்கப்பட்டிருந்தது.
இது இவ்வாறிருக்க எப்படி கட்டுரையாளர் ஆதாரமற்ற தகவலைக் கொண்டு கல்முனை வேறு கல்முனைக் குடி வேறு என்று நிறுவ முடியும்.
1946ல் உருவாக்கப்பட்ட இந்த பட்டின சபை ஏழு வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் 5 வட்டாரங்களில் முஸ்லீம்களும் 2 வட்டாரங்களில் தமிழர்களும் வாழ்ந்தனர். இந்த 7 வட்டாரங்களிலும் 6904 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 5131பேர் முஸ்லீம்களும் 1773 பேர் தமிழர்களுமாவர்.
கட்டுரையாளர் காட்ட முனையும் கல்முனையும் கல்முனைக் குடியும் வேறு வேறு என்ற விடயத்திற்கு ஆதாரமாக அவர் கொண்டுவருவது கிராம சேவகப் பிரிவுகளுக்கு இடப்பட்டிருக்கும் பெயரினை கொண்டு என்பது புலனாகிறது.
1978ற்கு முன்னர் கல்முனையில் மொத்தமாக 17 கிராமசேவகப் பிரிவுகளும் சாய்ந்தமருது 6 கிராமசேவகப் பிரிவுகளும் அடங்கலாக 23 கி.சே.பி காணப்பட்டுள்ளன.
1989ற்கு பின்னரே கல்முனை சாய்ந்தமருது அடங்கலாக மொத்தமாக 76 கிராம சேவகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவில் "கல்முனை" எனப் பெயர் குறிப்பிடப்படும் இடம் மட்டும்தான் கல்முனைக்கு சொந்தமானது ஏனைய பெயர்கள் கொண்டு அழைக்கப்படுபவை கல்முனைக்கு சொந்தமற்றவை என கட்டுரையாளர் சொல்ல முனைகிறார்.
எடுத்துக்காட்டுக்கா சில பிரதேச செயலகங்களை எடுத்து நோக்கினால்
சம்மாந்துறை 51 கிராமசேவகப் பிரிவுகளைக் கொண்ட ஒரு பிரதேச செயலகம் அங்கு 01 தொடக்கம் 14 வரை சம்மாந்துறை என அழைக்கப்படுகிறது. அதற்காக சம்மாந்துறை என அழைக்கப்படும் கிராமசேவகப் பிரிவு மாத்திரம்தான் சம்மாந்துறைக்கு சொந்தமானது மற்றயவை சம்மாந்துறைக்கு சொந்தமற்றவை எனக் கூற முடியுமா?
அதில் மட்டக்களப்பு தரவை என்ற பெயருடனும் கிராம சேவகப் பிரிவு அழைக்கப்படுகிறது. ஆகவே இந்த கிராம சேவகப் பிரிவு மட்டக்களப்புக்குச் சொந்தமானது அது சம்மாந்துறைக்கு சொந்தமானதல்ல எனக் கூற முடியுமா?
இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும் கல்முனையின் வடக்கு எல்லை தாளவட்டுவான் என்பதில் இரு சமூகத்தினரும் உடன்படுகின்றனர். ஆனால் தெற்கு எல்லையில் தான் முரண்படுகின்றனர்.
ஸாஹிறாக் கல்லூரி வீதி வரை என்கிறது முஸ்லிம் தரப்பு. அதற்காக அவர்கள் பல ஆதாரங்களை காட்டுகின்றனர். இல்லை தாளவட்டுவானில் இருந்து தரவைப் பிள்ளையார் கோயில் வரை எனக் கூறி ஸாஹிறாக் கல்லூரி வீதியிலிருந்து தரவைப் பிள்ளையார் வீதி வரையான முஸ்லீம்களை கழித்து விட்டு எல்லையைச் சுருக்கி முஸ்லீம்கள் கல்முனைக்கு சொந்தக் காரர்கள் அல்ல எனக்காட்டுவதற்காக மிகத் தந்ரோபாயமாக இந்த எல்லையைக் குறுக்கிக் கையாள்கிறார்களா என எண்ணத் தோணுகிறது. ஏனெனில் கல்முனையின் தெற்கு எல்லைக்கான வலுவான ஆதாரத்தினை கட்டுரையாளர் காட்டத் தவறியமையினாலாகும்.
எப்போதும் ஆட்சி செய்பவன் நிருவாகம் செய்ய விரும்புபவன் ஒரு பெரும் நிலப்பரப்பினையே கோருவான். ஆனால் கல்முனையில் அது விசித்திரம். பெரும் நிலப்பரப்பு வேண்டாம் தரவைப் பிள்ளையார் வீதியுடன் போதும் எனக் ஒரு நிருவாகப் பரப்பினைக் குறுக்கிக் கொள்வதில்தான் இந்தப் பிரச்சனையின் தொடக்கப்புள்ளி உள்ளது.
இரு சமூகத்தவர்களும் இந்தளவுக்கு முட்டி மோதுவதற்கு காரணம் கல்முனை சந்தை உட்பட கல்முனை பசார் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதுதாகும். இது தான் இங்குள்ள மிக முக்கியமா பிரச்சினையாகும்.
இதுவே இரு சமூகத்தினையும் மிக நீண்டகாலமாக கயிறிழுத்தல் நிலைக்கு தள்ளியுள்ளது.
தரவப் பிள்ளையார் வீதியிலிருந்து தாளவட்டுவான் வரையான பிரதேசத்தில்தான் கல்முனை பஸார் உட்பட கல்முனை பிரதேசசெயலகம் கல்முனை பொலிஸ் நிலையம். கல்முனை உயர் நீதிமன்றம், ரெலிகொம், கல்முனை ஆதார வைத்தியசாலை, கல்முனை உப பிரதேச செயலகம், கார்மேல் பாத்திமா கல்லூரி,உவெஸ்லி உயர்தரப் பாடசாலை,கல்முனை நூலகம், கல்முனை மாநகரசபை,மாகாண சுகாதார பிராந்திய காரியாலயம், வலயக் கல்வி அலுவலகம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம், கடற்றொழில் மீன்பிடித் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம், சந்தாங்கேணி மைதானம், பஸ் இஸ்ராண்ட்,பஸ் டிபோ, காணிப்பதிவகம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வங்கிகள் என அரச தனியார் நிறுவனங்கள் அத்தனையும் காணப்படும் கல்முனையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும்.
இதனால் இந்தப் பிரதேசத்தினை இரு சமூகங்களும் விட்டுக் கொடுக்க தயாரில்லாத நிலையில் காணப்படுகின்றன. இந் நிலையினை அரசியல் வாதிகள் பிச்சைக் காரனின் புண் போல் காலத்திற்கு காலம் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படியானால் கல்முனையைப் பிரிக்க முடியாதா? இது தொடர் கதையா என்றால் அதுதான் உண்மை...
சரி இவை தவிர கல்முனையினைப் பிரிப்பதற்கான வேறுதடைகளும் உண்டா? எனக் கோட்பின் ஆம் என்றே கூற முடியும்.
இன ரீதியாக பிரிப்பதில் உள்ள தடைகள் நில ரீதியாக பிரிப்பதில் உள்ள தடைகள்.
கல்முனைப் பிரதேசத்தினைப் பொறுத்தவரை ஒரு சரியான இயற்கை நியதிகளுடன் கூடிய எல்லைப் பிரிப்பு இல்லை.
தெற்கு எல்லையான தரவைப் பிள்ளையார் கோயில் என்பது கல்முனை அக்கரைப்பற்று வீதிக்கு மேற்காக அமையப்பெற்றுள்ளது. ஆனால் பிரதான வீதியின் மறுபுறத்தில் கிழக்கு நோக்கி கோயிலுக்கு முன்னால் இந்த தரவப் பிள்ளையார் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியில் எந்த தமிழ்க் குடும்பமும் இல்லை. இந்த வீதியில்தான் கல்முனை கடற்கரை பள்ளிவாசலும் அமைந்துள்ளது. இந்த வீதியினை தமிழர்கள் தரவைப் பிள்ளையார் வீதி என அழைக்கின்றனர். முஸ்லீம்கள் கடற்கரை பள்ளிவீதி என அழைக்கின்றனர் ஒரு வீதி இரு பெயர்கள்.
ஆளுக்காள் 29 கிராம சேவகப் பிரிவுகளைப் பிரித்துக் கொண்டு ஆழுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் கற்பனைக் கோடுகளே...
தமிழ் மக்கள் அனைவரும் கல்முனை உப பிரதேச செயலகத்தாலும் முஸ்லிம் மக்கள் அனைவரும் கல்முனை பிரதேச செயலகத்தாலும் நிருவகிக்கப்படுகிறார்கள் ஆனால் இரண்டு பிரதேச செயலக எல்லைக் கிராம சேவகப் பிரிவுகளில் மக்கள் இரண்டறக் கலந்து வாழ்கிறார்கள். இன ரீதியாக பிரிந்து நிருவகிக்கப்பட்டாலும் நில ரீதியாக பிரிக்கப்படாமல் வாழ்கிறார்கள். மேலும் ஒரு முஸ்லிம் கிராமம் ஒரு தமிழ் கிராமம் எனப் பின்னிப் பிணைந்து வாழ்கிறார்கள்.
இது ஏனைய பிரதேசங்கள் போல் இலகுவாக பிரிக்கக் கூடிய விடயமும் அல்ல
எப்படி குடியிருப்பு நிலங்களை தனித்தனியே பிரிக்க முடியாதோ அதே போன்றே வயல் நிலங்களையும் பிரிக்க முடியாதுள்ளது. இரண்டு சமூகத்தவர்களின் வயல் நிலங்களும் மாறி மாறி காணப்படுகின்றன.
எந்தளவுக் கெனின் இரண்டு ஏக்கர் வயற்காணி தமிழ் மகனின் பெயரிலும் முஸ்லிம் மகனின் பெயரிலும் எழுதப்பட்டிருக்கும் தமிழ் சகோதரன் வயலைச் செய்யும் போது முஸ்லிம் சகோதரன் இருவருக்கும் சொந்தமான வேறு ஒரு வயலைச் செய்வார். அடுத்த முறை தமிழ் சகோதரன் செய்த வயலை முஸ்லிம் சகோதரனும் முஸ்லிம் சகோதரன் செய்த வயலை தமிழ் சகோதரனும் மாறி மாறி வேளாண்மை செய்வார்கள் இருவருக்குக்கு பிரிக்க முடியாத இரு வயலும் சொந்தமானதாகக் காணப்படும். இதனை "தட்டுமாறும் வயல்" என அழைப்பர். இந்த நடைமுறை அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. இந்த நடைமுறை வேறு பிரதேசங்களில் இல்லை.
கல்முனைப் பிரந்திய மாகாண சுகாதாரப் பணிமனையில் ஒரு தமிழ் அதிகாரி நிருவகிக்கிறார். அதே போல் கல்முனை வலயக் கல்வி அதிகாரியாக ஒரு தமிழ் மகன் நிருவகிக்கிறார். இதற்காக முஸ்லீம்கள் யாரும் போர்க்கொடி தூக்க வேண்டிய அவசியமில்லை. அரச நிறுவனங்களில் அரசாங்கம் நியமிக்கும் அதிகாரிகள் நிருவகிப்பர் இதற்கு இனவாத சாயம் பூசுவது மடமைத்தனம். இவ்வாறு தமிழ் அதிகாரிகளின் கீழ் முஸ்லீம்களும் முஸ்லிம் அதிகாரியின் கீழ் தமிழ்களும் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் தத்தமது கடமைகளை நிறைவேற்றி மக்கள் நிம்மதியுடன் வாழ்கின்றனர். அன்றய சின்னத்தம்பி போடி, சத்துருக்கப் போடி,செல்லையா போன்ற தமிழ் வன்னிமைக்கு கீழும் மஜீது வன்னியர் காரியப்பர் வன்னியர் போன்ற முஸ்லீம் வன்னிமையின் கீழும் ஒற்றுமையாக வாழ்ந்து பழக்கப்பட்ட புண்ணிய பூமி இது.
ஆகவே அண்ணன் தம்பிகளாக வாழும் இரு சமூகத்தினையும் அதிகார வேட்கையில் பிரித்துவிடாமல் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாய் வாழ வழியைத் தேடுவோம்.
இல்லை பிரியத்தான் வேண்டுமென்றால் இன ரீதியாக பிரித்து இரண்டு சமூகங்களினையும் மோதவிட்டு கல்முனையை பலிபீடமாக்காமல் இரு பிரதேச செயலகங்களுக்குள்ளும் இரு சமூகங்களும் இணைந்து வாழக்கூடிய நிலத்தொடர்புடைய பிரதேசங்களாக பிரித்துக் கொள்வதற்கான மிகச் சரியான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி காண்போம்.
ஆகவே இரண்டு சமூகங்களும் சுமூகமாக வாழ வழியைத் தேடுவதோடு எந்த சமூகத்திற்கும் பாதிப்பு வந்திடாமல் இந்த முரண்பாட்டினை அடுத்த சந்ததிக்கும் கடத்தாமல் முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பாடுபடுவோம்..