Ads Area

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு.

 சென்னை:

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவரை ( எதிர்க்கட்சி தலைவரை) தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7-ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே நேரடி கருத்து மோதலும் ஏற்பட்டது.

கட்சி அலுவலகத்துக்கு வெளியே இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதமும் நடைபெற்றது. எனவே அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை முடிவு செய்ய முடியாமல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் 10-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து  திட்டமிட்டபடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது.

மூன்றுமணி நேரமாக நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிமுக-வின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe