(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபை எல்லையினுள் உணவுப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மாநகர சபையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து கையாளுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு திங்கட்கிழமை (10-05-2021) மாலை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் ஆகியோர் கையொப்பமிட்டு, ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லையினுள் அனைத்து உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பரிசோதித்தல், சட்ட நடவடிக்கை எடுத்தல், நுகர்வோருக்கு சுத்தம், சுகாதாரமான உணவுகளை உறுதிப்படுத்தல் மற்றும் பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட செயற்பாடுகளை மாநகர சபையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.