நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தார் அவர்களின் மேற்பார்வையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.எம்.பைசால் மற்றும் எம்.பைலான் ஆகியோரை கொண்ட குழு இன்று கொவிட்-19 நோயில் இருந்து பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாக்கும் நோக்கில் வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டது.
இந் நிகழ்வின் போது வர்த்தகர்களுக்கு அறிவூட்டல் வழங்கப்பட்டதுடன் இனிவரும் காலங்களில் இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. அதே போன்று பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் கதிப்மார்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் சுகாதார நடவடிக்கைளை விளக்கும் கூட்டம் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் கேட்போர் கூடத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜும்மா பெரியபள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபதுல் ஹரீம் ஹாஜி, செயலாளர் அப்துல் மஜீத் ரொஷான் உட்பட நிர்வாகிகள் மற்றும் மௌலவிமார்கள், சுகாதார தரப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.