Ads Area

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட வேண்டும் கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்க செயலாளர் முக்தார் வேண்டுகோள்.

 (அஸ்லம் எஸ்.மௌலானா)

விரைவில் வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவிக்கு முறைப்படி விண்ணப்பங்களைக் கோரி தகுதியானவர் நியமிக்கப்பட வேண்டும் என அரச சேவை ஆணைக்குழுவிடம் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்திருப்பதாக அதன் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் மேலும் தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக தற்போது கடமையாற்றுபவர் எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி கல்விச் சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.

அரச சேவை ஆணைக்குழுவின் நிருவாக நடைமுறைக்கோவை ஏற்பாடுகளுக்கமைய பதவி ஒன்றுக்கான வெற்றிடம் ஏற்படுவதற்கு 03 மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பம் கோரப்பட வேண்டும். அதன்படி ஒரு அதிகாரி ஓய்வுபெறும் அன்றைய தினத்திலேயே புதிய அதிகாரி பதவி ஏற்கும் வகையில் அந்நியமனம் இடம்பெற வேண்டும்.

இலங்கை கல்வி நிருவாக சேவைப் பிரமாணக் குறிப்பின் அடிப்படையில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவிக்குரிய நியமன அதிகாரம் அரச சேவைகள் ஆணைக்குழுவுக்குரியதாகும்.

இது தொடர்பான நேர்முகப் பரீட்சை சபையில் அரச சேவை ஆணைக்குழுவின் அதிகாரி, கல்வி அமைச்சு அதிகாரி, குறித்த மாகாணத்தின் ஆளுனரது பிரதிநிதி ஆகியோர் இடம்பெற வேண்டும்.

மாகாண சபைகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2004ஆம் ஆண்டு காலப்பகுதி வரை மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியானது அரசாங்க சேவை ஆணைக்குழுவால் நேரடியாக நிரப்பப்பட்டு வந்தது.

இதன் பின்னர் மாகாண ஆளுனர்களால் மாகாண கல்வி பணிப்பாளர் நியமனம் வழங்கப்பட்டபோதும் அதற்கான ஒத்திசைவை அரச சேவை ஆணைக்குழு வழங்கி வந்தது. ஆனால் புதிய சேவைப் பிரமாண

குறிப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

எனவே மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியை, சேவை மூப்புக்கூடிய தகுதியான கல்வி நிருவாக அதிகாரியைக் கொண்டு முறைப்படி நிரப்புவதற்கு உடனடியாக விண்ணப்பம் கோர, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக்கோரி அரச சேவை ஆணைக்குழுவுக்கு தாம் கடிதம் அனுப்பி வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe