Ads Area

சம்மாந்துறையில் சுமார் 150 வருட கால வரலாற்றைக் கொண்ட பூமரச் சந்தி “மரம்“ ஏன் வெட்டப்பட்டது..??

சம்மாந்துறையில் சுமார் 150 வருட கால பழமை வாய்ந்த மரமொன்று கடந்த செய்வாய்க் கிழமை சம்மாந்துறை பிரதேச சபையினால் பொலிஸ் பாதுகாப்புடன் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளமை சம்மாந்துறை மக்கள் மத்தியில் குறிப்பாக சம்மாந்துறை இளைஞர்கள் மத்தியில் பாரிய விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

சம்மாந்துறையில் உள்ள மிகப் பிரபலமான பொது இடங்களில் ஒன்று பூமரத்து சந்தி என்ற ஒரு இடமாகும். இது சம்மாந்துறையின் மிகப் பிரசித்தி பெற்ற ஒரு நில அடையாளமாகும், சம்மாந்துறை மக்கள் மாத்திரமல்ல வெளியூர் மக்களுக்கு கூட சம்மாந்துறையில் உள்ள பூமரத்துச் சந்தி பற்றி தெரியாதிருக்க வாய்ப்பில்லை அந்த அளவுக்கு இது ஒரு மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இதற்குக் காரணம் அங்கு 150 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக கிளைகளைப் பரப்பி உயர்ந்து காட்சியளித்த ஒரு மரமாகும் அதனாலேயேதான் அந்த இடத்திற்கு பூமரத்து சந்தி என்ற பெயர் கூட வந்தது.

தற்போது அந்த மரத்தை வெட்டி வீழ்த்தியமையை சம்மாந்துறை மக்களும் இளைஞர்களும் இது ஒரு மரப்படுகொலை, வரலாற்று அழிப்பு என விமர்சனம் செய்து வருகின்றார்கள், இது விடையத்தில் வெளியூர் மக்கள் கூட தங்களது கண்டனங்களை பதிவு செய்ததினையும் சமூகவலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது.

மரத்தின் வேர்கள் அழுகி வரும் நிலையில் உள்ளதனால் மரமானது அதனை அண்மித்துள்ள குடியிருப்பாளர்களின் வீடுகளை நோக்கி சாயத் தொடங்கியுள்ளதாகவும், பலத்த காற்று வீசினால் எந்த நேரத்திலும் வீடுகள் மீது விழும் அபாயம் இருப்பதாகவும், இது விடையம் தொர்பில் சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் ஆய்வுகளுக்குப் பின்னர் கடந்த செய்வாய்க் கிழமை பொலிஸ் பாதுகாப்புடன் இம் மரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.

இதற்கு முன்னர் ஒரு தடவை இம் மரத்தினை வெட்டுவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்த வேளை பொதுமக்களின் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பினால் அது இடைநிறுத்தப்பட்டிருந்தது.

பூமரத்து சந்தி மரமானது 1870ம் ஆண்டு காலப்பகுதியில் சம்மாந்துறை நீர்ப்பாய்ச்ச வன்னியார் என்று செல்லமாக அழைக்கப்பட்ட மீராலெப்பைப் போடி வன்னியார் என்பவரால் அவரது திருமணத்திற்கு பின்னர் நடப்பட்டதாக கூறப்படுகிறது. மீராலெப்பைப் போடி வன்னியார் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அன்றைய காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட ஒரே ஒரு நீர்ப்பாசன அதிகாரியாவார் இவர் சம்மாந்துறையைச் சுற்றியுள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கான நீப்பாசன பொறுப்புதாரியாகவிருந்தார். இதனாலேயே அவரை அப்போது நீர்ப்பாய்ச்ச வன்னியார் என்று மக்கள் செல்லமாக அழைத்து வந்தனர் அவரால் நட்டு வைக்கப்பட்டதாக கூறப்படும் இம் மரமானது 150 வயது நிரம்பியதாகும்.

ஆதாரம் - http://www.dailynews.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe