அது ஹிஜ்ரி 1415, அப்போதெல்லாம் இந்த கையடக்க தொலைபேசிகளோ சமூக ஊடக தொடர்புகளோ இருக்கவில்லை, நான் அல்புரைதா நகரில் உள்ள அல் ஜாமிஉல் கபீர் எனும் மஸ்ஜிதுக்கு ஜும்மா தொழுகைக்காக சென்றேன்.
தொழுகை முடிந்ததும் ஜனாஸா தொழுகையொன்று இடம்பெற்றது, யார் என்பதை அறிந்து கொள்ள அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தேன்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அவர் என்னுடன் வியாபார தொடர்புகள் உள்ள சவூதி வியாபாரி ஸஊத் என அறிந்து கொண்டேன், அவர் எனது நண்பர் அவரது ஜனாஸாவிற்கு சென்று அவரது சகோதரர்கள் பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பினேன்.
இருவருக்கும் இடையில் நட்பும் வியாபார தொடர்புகளும் இருந்ததால் அவரது கொடுக்கல் வாங்கல் குறித்து அறிந்திருந்தேன்.
அவர் மற்றுமொரு வியாபாரியிற்கு மூன்று இலட்சம் றியால்கள் கடன் செலுத்த வேண்டியிருந்ததை நான் அறிவேன், அந்த வியாபாரி என்னிடம் வந்து ஆலோசனை கேட்டார், இருவரும் வியாபாரி ஸஊத் அவர்களின் வீட்டுக்கு சென்று பிள்ளைகளை சந்திப்பதாக முடிவு செய்து அங்கு சென்றோம்.
அவர்கள் எழுத்துமூலம் ஆதாரம் கேட்டார்கள், ஆனால் முறையாக எழுதப்பட்ட ஆவனங்கள் இருக்கவில்லை, சாதாரண கணக்கு வழக்கு குறிப்புகளே இருந்தன, அப்போது நண்பர்கள் நாம் அவ்வாறுதான் நம்பிக்கையின் பேரில் கொடுக்கல் வாங்கல் செய்வோம்.
எங்கள் தந்தை விட்டுச் சென்றுள்ள முழு செல்வமும் ஆறு இலட்சம் றியால்கள் நீங்கள் மூன்று இலட்சம் கடன் என்கிறீர்கள், ஆதாரம் இருந்தால் தாருங்கள், இன்றேல் சென்று வாருங்கள் என்று பிள்ளைகள் மறுத்து விட்டார்கள்.
எனக்கோ மிகவும் கவலையாக இருந்தது, கடனாளியாக மரணித்து விட்ட நண்பரின் கப்ருடைய வாழ்க்கை குறித்து எனது நெஞ்சம் உறுத்திக் கொண்டிருந்தது.
என்னிடமோ அவ்வளவு பணம் இருக்கவில்லை, கனவில் நண்பர் என்னிடம் கடன் கேட்டு கெஞ்சுவதை கண்டு ஒரு தீர்மானத்திற்கு வந்தேன்.
எனது நீண்டகால உழைப்பினால் வாங்கியிருந்த எனது வியாபார ஸ்தலத்தை பொருட்களுடன் விற்க முடிவு செய்தேன், நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் றியாலிற்கு விற்றேன்.
உடனடியாக நண்பர் ஸஊத் தர வேண்டிய கடன் பணம் என மூன்று இலட்சம் றியால்களை உரியவரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டேன்.
ஓரிரு நாட்களில் அவர் என்னிடம் வந்து ஒரு இலட்சம் றியால்களை திருப்பி தந்து விட்டு உமது பெருந்தன்மை கண்டு நானும் கடனில் ஒரு இலட்சத்தை மன்னித்து அவருக்கு விட்டுத் தந்துவிட்டேன் என்று கூறிச் சென்றார்.
நான் மீண்டும் வியாபாரத்தை சிறிய அளவில் ஆரம்பிக்க முயற்சிகளில் ஈடுபட்டேன், எனது நிலை கண்ட பலரும் விடயத்தை விசாரித்து அறிந்து கொண்டனர், ஒரு வியாபபாரி தான் மூடிவைத்திருந்த இரு கடைகளை எனது வியாபாரத்தை மேற்கொள்ளுமாறு தந்துதவினார்.
இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு லாரி நிறைய சாமான்களுடன் வந்த இளைஞர்கள் சிலர் எங்களுடைய தந்தை மொத்த வியாபாரி இவற்றை உங்களுக்கு தந்துள்ளார் நீங்கள் விற்றபின் இவற்றிற்கான பெறுமதியில் அரைவாசியை திருப்பிச் செலுத்தினால் போதும் என்று கூறியுள்ளார் என்றனர்.
தொடர்ந்து சிலகாலம் அவ்வாறு அனுப்பி வைத்தனர், இன்னும் ஒரு சிலரும் எனக்கு உதவினர்.
தொடர்ந்து வர்தகத்தை வெற்றிகரமாக செய்து வந்த நான் முறையாக எனது ஸகாத்தையும் கணக்கிட்டு செலுத்தி வந்தேன்.
அல்ஹம்து லில்லாஹ் இது 1436 ரமழான் மாதம் எனது ஸகாத் பணம் மாத்திரம் மூன்று மில்லியன் றியால்கள், முப்பது இலட்சம் றியால்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் எனது செல்வத்தில் விருத்தியை ஏற்படுத்தியுள்ளான்.
என அந்த சூடானிய நண்பர் தனது அனுபவத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
தந்தையின் சொத்தை தாம் அனுபவிக்க நினைக்கும் பிள்ளைகள் அவரது கப்ருடைய வாழ்வை, மறுமை வாழ்வை பற்றி சிந்திக்க வில்லை, அல்லாஹ்வை அஞ்சிய ஒரு நல்ல நண்பர் அந்த கடமையை செய்துள்ளார்.
இன்று நல்ல உறவுகளிடம், நண்பர்களிடம் முதலீடு வியாபாரம் என்று முதலாகவும் கடனாகவும் பெற்று பின்னர் மோசடிகள் செய்வோர், கைகொடுத்த உறவுகளை, நண்பர்களை பகைவர்களைப் போல், கடன்காரர்களைப் போல் நடத்துவோர், தாம் வீடு வாசல் வாகனம் சொத்து சுகம் உல்லாசமென பெருமிதத்தோடு வாழ்வதை காண்கிறோம்.
கடனுடன் மரணித்தவர்களது ஜனாஸாக்களை தாம் முன்னின்று தொழுவிக்கவும் இறைதூதர் ஸல் அவர்கள் மறுத்துள்ளார்கள்.
குப்ரிலிருந்து பாதுகாப்புத் தேடியது போல் கடனிலிருந்தும் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் மூலம் படிப்பினைகள் பெற்று கடன்களை முறையாக செலுத்துவதோடு, கடன்பட்டவர்களுக்கு உதவவும் மரணித்தவர்களது கடன்களை செலுத்தவும் கஷ்ட நஷ்டங்களில் நண்பர்கள் உறவினர்கள் உதவி ஒத்தாசை செய்து கொள்ளவும் எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு நல்லருள் புரிவானாக!
இதனை ஒரு சதகதுல் ஜாரியாவாக அறபியில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன்.
எம்மையும் எமது பெற்றார் உடன்பிறப்புக்கள், மனைவி மக்கள், அன்பிற்குரியோர், ஆசான்கள் அனைவரையும் உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்