கனடா நாட்டில் கடந்த 1840ம் ஆண்டில் கல்வியில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இதன்படி, குழந்தைகள் வளர தொடங்கியதும் அவர்களை குடும்பத்தில் இருந்து பிரித்து, பள்ளி கூடத்திலேயே தங்கி படிக்கும் நடைமுறை அது.
உறைவிட பள்ளி கூடங்களாக செயல்பட்ட இவை, பெருமளவில் கிறிஸ்தவ தேவாலயங்களால் நடத்தப்பட்டு வந்துள்ளன. இதுபோன்ற பள்ளி கூடங்களில் படித்த குழந்தைகளில் 1.5 லட்சம் பேர் பாலியல் வன்முறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த பள்ளி கூடங்களில் படித்தவர்களில் 4,100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதவிர, கணக்கில் வராத 215 குழந்தைகளின் உடல்கள் சமீபத்தில் பள்ளியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்களில் 3 வயது குழந்தையும் அடங்கும்.
கடந்த 19ம் நூற்றாண்டின் இறுதி வரை உறைவிட பள்ளி நடைமுறை தொடர்ந்துள்ளது. இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள கம்லூப்ஸ் இந்தியன் உறைவிட பள்ளி கடந்த 1978ம் ஆண்டு மூடப்பட்டது.
இந்த சூழலில், அந்த பள்ளியில் ரேடார் நிபுணரின் உதவியுடன் பூமிக்குள் கதிர்களை ஊடுருவ செய்து, உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து 6 ஆண்டுகள் இந்த நடைமுறை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவை கலாசார படுகொலை என ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இந்த செய்தியை அறிந்து எனது மனம் உடைந்து போனது. நம்முடைய நாட்டின் வரலாற்றில் கருப்பு அத்தியாயம். வலியை உண்டு பண்ணும் நினைவூட்டல் இது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பள்ளியில் படித்த குழந்தைகள் சமூகத்தின் எந்த குடும்பத்தில் உள்ளனர் என்று கண்டறியும் பணியில் அந்நாட்டின் கெம்லூப்ஸ் டி செக்வெபம் என்ற அமைப்பு ஈடுபட்டு உள்ளது. வருகிற ஜூன் மத்தியில் முதற்கட்ட ஆய்வு முடிவுகள் வெளிவரும் என கூறப்படுகிறது.