காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
உலகத்தில் ஊழித் தாண்டவமாடிய கொரோனா வைரஸ் இறுதியாக அண்டைய நாடான இந்தியாவில் மோசமாக கோரத்தாண்டவம் ஆடி சமகாலத்தில் இலங்கையில் திவீரமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றுக்கள் இரண்டுலட்சத்தைக் கடந்திருக்கின்ற அதேவேளை மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது 2073பேர் மரணித்துள்ளனர்.
பயணத்தடை அமுலுக்குப் பின்னரும் தினம் தினம் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாயுள்ளது.
இதுவரை இலங்கையில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 923 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. மரணங்கள் 2073 ஆக உயர்ந்துள்ளது. 30 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க கிழக்கு மாகாணத்தின் நிலைவரம் நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டுபோகின்றது.
அங்கு தொற்றுக்களின் எண்ணிக்கை 11ஆயிரத்தைக் கடந்து 11247 ஆக உயர்ந்துள்ளது. மரணங்கள் 200 யைத் தாண்டி 219 ஆக உயர்ந்துள்ளது. இதில் 193 மரணங்கள் 3 வது அலையில் ஏற்பட்டதாகும்.
இதுவரை கல்முனைப் பிராந்தியம் தவிர்ந்த ஏனைய மூன்று பிராந்தியங்களிலும் இதுவரை 33883 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கிழக்குப்பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
இந்த 47726 தடுப்பூசிகளில் அம்பாறைப் பிராந்தியத்திற்கு அதிகூடிய 18496 ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளன. அடுத்ததாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 16661 தடுப்பூசிகளும் திருமலை மாவட்டத்திற்கு 12569 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதும் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. கல்முனைப் பிராந்தியத்திற்கு தடுப்பூசி ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் 13 சுகாதாரப்பிரிவிலும் முன்னெடுக்க்பபட்டு வருகின்றது. விரைவில் அங்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.