காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
கல்முனைப் பிராந்தியத்தில் வழமைக்கு மாறாக கொரோனா நச்சுயிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அடுத்த இரு வாரங்களில் கொரோனா மரணங்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 2000 த்தை கடந்துள்ளது. அதாவது நேற்று (13) வரை அந்த எண்ணிக்கை 2023 ஆகவிருந்தது மரணங்கள் 27 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 3 பேர் மரணித்துள்ள அதேவேளை மருதமுனை மற்றும் பாலமுனை கொவிட் இடைத்தங்கல் நிலையங்களில் இவ்வாரம் இருவேறு மரணங்கள் சம்பவித்துள்ளமை பற்றிக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கண்டு பிடிக்கப்பட்ட வீரியம் கூடிய திரிவுபட்ட ருமு டீ.117 அல்பா வைரஸ் மிகவும் பாரதூரமானது. அது விரைவில் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. அட்டப்பள இளம் குடும்பஸ்தரின் மரணத்திற்கும் இவ்வகை வைரசே காரணமென சந்தேகிக்கிறோம் என்றார்.
இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்போருக்கு நோயின் தாக்கம் ஆபத்து நிலையை அடைகின்ற போது ஏனைய வளமுள்ள வைத்தியசாலைகள் அவர்களை உள்வாங்கி சிகிச்சையளிக்க வேண்டியது அவசியமாகும்.
கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளரின் ஏற்பாட்டில் வெகுவிரைவில் நான்கு வைத்தியசாலைகளில் கொவிட் சிகிச்சை மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் ஆகிய ஆதார வைத்திய சாலைகளில் இத்தகைய 100 கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வண்ணம் வசதி செய்யப்படவிருக்கின்றது. அதற்காக நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. அப்பணி முன்னெடுக்கப்படுகிறது.
அதேவேளை முதலிரு அலைகளை விட மிகமோசமான தாக்கத்தை இந்த மூன்றாவது அலை ஏற்படுத்திவருகிறது. பொதுமக்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் அவதானமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.
இடைத்தங்கல் நிலையங்களில் பராமரிப்பு சேவையும் வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் சேவையும் மேலும் விரிவுபடுத்தப்படவேண்டுமென சமுக ஆர்வலர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அது தொடர்பாக இரண்டொரு தினங்களில் ஊடகங்களின் முன்னிலையில் சந்திப்பொன்றை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார்.