Ads Area

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுக் குடியிருப்பாளர்கள் குவைத் திரும்ப அனுமதி..!!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பயணத் தடையை நீக்கி, குவைத்தில் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட் 1 முதல் குவைத் திரும்பலாம் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரெக் அல்-மஸ்ரெம் தெரிவிக்கையில், ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer/BioNTech), மாடர்னா (Moderna) அல்லது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்கள் அல்லது ஜான்சன் அண்ட் ஜான்சன் (Johnson & Johnson) தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்ற வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு திரும்ப முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் குவைத் திரும்பும் வெளிநாட்டவர்கள் வருகையின் போது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான PCR சோதனை முடிவைக் காண்பிக்க வேண்டும் என்றும், மேலும் ஏழு நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விமான நிலையத்தில் வெளிநாட்டினர் திரும்புவதற்கான வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று மஸ்ரெம் கூறியுள்ளார்.

மேலும் ஜூன் 27 முதல் தடுப்பூசி போடாத நபர்கள் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றில் உணவருந்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஜிம்கள், சுகாதார கிளப்புகள் ஆகியவற்றுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தடுப்பூசியின் இரண்டு டோஸ் பெற்றவர்களுக்கு அல்லது ஒரு டோஸ் எடுத்து குறைந்தது 14 நாட்கள் பூர்த்தியடைந்தவர்களுக்கு இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மால்கள், உணவகங்கள் போன்றவை இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும் என்ற நடைமுறையானது தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம் - https://www.khaleejtamil.com மற்றும் https://gulfnews.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe