ஓமானில் உள்ள இந்து கோயில்கள் மற்றும் கிரிஸ்தவ தேவாலயங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தற்காலிகமாக மூடப்பட்ட பின்னர் வழிபாட்டாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று ஓமான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓமான் முழுவதும் COVID-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓமான் தர்சாய்டில் (Darsait) உள்ள ஸ்ரீ கிருஷ்ணா இந்து கோயில் மற்றும் மஸ்கட்டில் உள்ள ஸ்ரீ சிவன் கோயில் இரண்டும் இன்று (ஜூன் 12 ஆம் தேதி) மீண்டும் திறக்கப்படும், தேவாலயங்கள் நாளை (ஜூன் 13) அன்று திறக்கப்படும்.
முகமூடி அணிவது மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கடுமையான COVID-19 நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவுள்ளனர். இரு கோவில்களுக்குள்ளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே நுழைய அனுமதி விதிக்கப்படவுள்ளது.
செயின்ட் பீட்டர் மற்றும் பால் கத்தோலிக்க திருச்சபை நாளை (ஜூன் 13) அன்று மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேவாலய நிர்வாகம் ஆன்லைன் பதிவு மூலம் மட்டுமே நுழைய அனுமதிக்கும். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகளை அடுத்து, கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் இரண்டுமே கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி மூடப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.