Ads Area

சம்மாந்துறை மார்க்க அறிஞர் அப்துல் காதர் (மிஸ்பாஹி) அவர்களின் மறைவுக்கு மு.கா.தலைவர் ஹக்கீம் அனுதாபம்.

சம்மாந்துறையின் பிரபல்யம் வாய்ந்த  சன்மார்க்க அறிஞர் உஸ்தாத், அஷ் ஷெய்க் எம். ஐ. அப்துல் காதர் (மிஸ்பாஹி)  இன்று அதிகாலையில் காலமான செய்தி தனக்கு அதிர்ச்சியையும் , கவலையையும் அளித்ததாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியில் ஆரம்ப காலத்தில் இருந்தே விரிவுரையாராகவும் , அதன் அதிபர் மர்ஹூம் ஷெய்குத் தப்லீஃ அலியார் ஹஸ்ரத் அவர்களின் தலைமையின் கீழ் பிரஸ்தாப கல்லூரியின் பிரதி அதிபராகவும் கடமையாற்றிய அப்துல் காதர் ஹஸ்ரத்தின் மறைவு சமூகத்துக்கும், கல்வித் துறைக்கும் பேரிழப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவையிட்டு , முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

சம்மாந்துறை ஜம்இய்யதுல் உலமாவின்  உப தலைவராகவும் , அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் நீண்டகால உறுப்பினராகவும் , சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைக்கான ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதியாகவும் , சம்மாந்துறை நல்லிணக்க சபையின் உறுப்பினராகவும் அவர் சிறப்பாகச்  செயற்பட்டுள்ளார். அது மட்டுமன்றி, இஸ்லாமிய பிக்ஹ் சட்டக்கலையின் நிபுணத்துவமிக்க கல்விமானாக  திகழ்ந்தமையினால்அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழு உறுப்பினராக மிக நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். தான் மரணிக்கும்வரை தப்லீகுல் இஸ்லாம் கல்லூரியின் விரிவுரையாராகக் கடமையாற்றி , தற்போதைய கொவிட் - 19 காலத்தில் கூட ஸூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக மாணவர்களுக்கு உற்சாகத்துடன் அறிவூட்டி வந்தமை  கல்வியின்பால் அவர் கொண்டிருந்த பேரபிமானத்தை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன், முப்பது ஆண்டுகளுக்கு மேல் சம்மாந்துறை நகரின் மத்தியில் இலங்கும் ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலில் பேஷ் இமாமாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

எமது கட்சியின் மறைந்த பெருந் தலைவருக்கும், எனக்கும் பயனுள்ள ஆலோசனைகளை அவர் வழங்கி வந்தார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சன்மார்க்க  அறிஞரின் கறைபடியாத , களங்கமற்ற உயர்பணிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொண்டு, அன்னாருக்கு மேலான ஜென்னதுல் பிர்தௌவ்ஸ்  சுவன வாழ்வை  வழங்குவானாக.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe