( வி.ரி.சகாதேவராஜா)
யுத்த காலத்தில் எல்லைப் பகுதியில்வைத்து கைதிகள் பரிமாற்றம் நிகழ்வது போன்று முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டி மக்களுக்கான உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டது.
முடக்கப்பட்ட அம்பாறையையடுத்துள்ள புதிய வளத்தாப்பிட்டிக் கிராம மக்களுக்கென ஒரு தொகுதி உலருணவு நிவாரணப் பொதிகளை சமுக சேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலருணவுப் பொதிகளை (8) வழங்கி வைத்தார்.
இவ் உலருணவுப்பொதிகள் முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டி எல்லைப் பகுதியில் வைத்து சம்மாந்துறை பிரதேச செயலாளரின் பிரதிநிதியான அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.ரவி முன்னிலையில் கையளிக்கப்பட்டது.
கிராமம் பூராக இராணுவத்தாலும் பொலிசாரினாலும் பலத்த காவலுக்குட்பட்டு சகல விதிகளும் மறிக்கப்பட்டு யாரும் உள்ளே வெளியே நுழையாத வண்ணம் தடைசெய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 63 பேருக்கு தொற்று ஏற்பட்டும் ஒரு பெண்மணி மரணித்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாரியம்மன் ஆலய பிரதான வீதியில் வைத்து சமுக செயற்பாட்டாளர்கள் தமது உலருணவுப் பொதிகளை இறக்கி வைத்ததும் உள்ளிருந்து கிராம அமைப்பின் தலைவர் வெ.ஜெயச்சந்திரன் தலைமையிலான கிராம மட்ட இளைஞர் குழுவினர் அவற்றை பிறிதொரு படி வாகனத்தில் ஏற்றி நன்றி தெரிவித்துச் சென்றதைக்காண முடிந்தது.
வளத்தாப்பிட்டி கொவிட் 19 உறவுகள் கிராம அமைப்பின் முக்கியஸ்தர் வெ.ஜெயச்சந்திரன் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இம் முதற்கட்ட நிவாரணத் தொகுதி வழங்கப்பட்டது. ஆயிஷா அறக்கட்டளை நிதிய அனுசரணையின்கீழ் இவ்வுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட எமது கிராம மக்களுக்காக முதன்முதலில் சமுகசெயற்பாட்டாளர்களான தவிசாளர் கி.ஜெயசிறில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உயிரைத் துச்சமென மதித்து காரைதீவிலிருந்து இங்கு வந்து இவ்வுதவியை எமக்கு வழங்கி வைத்தமைக்காக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தலைவர் வெ.ஜெயச்சந்திரன் அங்கு நன்றிகூறினார்.