Ads Area

மேலும் 1 லட்சம் தடுப்பூசிகள் இன்றோ நாளையோ கிடைக்கலாம்!

 (வி.ரி.சகாதேவராஜா)

எமக்கு முதற்கட்டமதாக வழங்கப்பட்ட 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் அனைத்தும் இருநாட்களில் 13 சுகாதாரப்பிரிவுகளிலும் செலுத்தப்பட்டுவிட்டன. மேலும் 1லட்சம் தடுப்பூசிகள் இன்றோ நாளையோ கிடைக்கலாம். அப்படி வருகின்ற கட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கல் மிகவும் துரிதமாக நடைபெறும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.குண. சுகுணன் தெரிவித்தார்.

நீண்ட எதிர்பார்ப்புகளின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட  கல்முனைப் பிராந்தியத்திற்கான தடுப்பூசி செலுத்தும் முதற் கட்டப்பணிகள் நேற்றுடன் (26) திங்கட்கிழமை  நிறைவடைந்தது.  இதற்கென 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்று கடந்த சனிக்கிழமை முதல் சகல 13 சுகாதாரப் பிரிவுகளிலும் ஏற்றப்பட்டு வந்துள்ளது. முதலிருநாட்களில் 45201 பேருக்கு செலுத்தப்பட்டிருந்தது. இது மாகாணத்தில் சாதனை என்று கூறலாம்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

கல்முனைப் பிராந்தியத்தில் 4 லட்சத்து 88 ஆயிரம் பேர் சனத்தொகையாகப் பதிவிடப்பட்டுளள்து. இவர்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி பெற தகுதியாவர்களாவர். எனவே 5 லட்சம் தடுப்பூசிகள் தேவையாகின்றன.

பிராந்தியத்தின் கணக்கெடுப்பின்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 51 ஆயிரம் பேராவர். ஆசிரியர்கள் 85000 பேருள்ளனர். அரச ஊழியர்கள் 15 ஆயிரம் பேருள்ளனர். முப்படை பொலிசார் 2500 பேரும் கர்ப்பிணித் தாய்மார்கள் 1500 பேரும் உள்ளனர்.

இந்த நிலையில் முதலில் கிடைக்கப்பபெற்ற 50 ஆயிரம் தடுப்பூசிகள் வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளன.

மேலும் விரைவில் அடுத்த தொகுதி தடுப்பூசிகள் வந்து சேர்ந்தவுடன் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.

கல்முனைப் பிராந்தியத்திலுள்ள  13 சுகாதாரவைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலுள்ள 07 ஆதார வைத்தியசாலைகளிலும் 13 பிரதேச வைத்தியசாலைகளிலும் சுகாதாரப்பிரிவினர் ஏற்படுத்தும் பாடசாலைகள் போன்ற விசேட மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டன.

வைத்தியசாலைகளில் நோய்வாய்ப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்கள் போன்றோருக்கு முதலில் ஏற்றப்பட்டன.

முதற்கட்டமாக 60வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்தடுப்பூசி வழங்கப்பட்டன.

அதேவேளை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டன.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe