காரைதீவு நிருபர் சகா
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தீநுண்மியின் கோரத்தாண்டவம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது.
அங்கு இதுவரை 277 பேர் பலியாகியுள்ளனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. நேற்று (3) வரை 15556 பேருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கென வழங்கப்பட்ட 75ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகளில் 74 ஆயிரத்து 901 ஊசிகள் நேற்று (3) வரை ஏற்றப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண சுகாதாரதிணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
மட்டு.மாவட்டத்தில் 24995 பேருக்கும் அம்பாறை பிராந்தியத்தில் 24991 பேருக்கும் திருமலை மாவட்டத்தில் 24915 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.
கல்முனைப்பிராந்தியத்திற்கு இன்னும் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்படவில்லை.அதற்கான முன்னாயத்தவேலைகள் சகல சுகாதாரப்பிரிவுகளிலும் எடுக்கப்பட்டுவருகின்றன.
இதுதொடர்பில் கிழக்கு மாகாண சுகாதாரதிணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக்கிடம் கேட்டபோது இதுவரை மத்தியஅமைச்சிலிருந்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று பதிலளித்தார்.
இதேவேளை பிராந்தியப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தனது பதிவில் அடுத்தவாரமளவில் தடுப்பூசிகள் செலுத்தப்படவிருக்கின்றன எனக்குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படியிருப்பினும் கல்முனைப் பிராந்தியத்திற்கு தடுப்பூசிகள் வழங்கப்படவேண்டும் என சுகாதாரத்துறையினர் தொடக்கம் அரசியல்வாதிகள் வரை வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டும் இன்னமும் தடுப்பூசிகள் வழங்கப்படாதமை குறித்து மக்கள்மத்தியில் விசனம் தெரிவிக்கப்பட்டுவருகின்றது.கூடவே அச்சமும் நிலவுகிறது.