Ads Area

சராசரி மனிதனின் உளவியலை ஆராய்கின்ற 'பூச்செண்டுபோல் ஒரு மனிதன்'

நஸார் இஜாஸ் - (Kinniyan Times) 

எம்.எம். நௌஷாத் அவர்களுடைய 'பூச்செண்டு போல் ஒரு மனிதன்' சிறுகதை தொகுதி மனிதனின் உளவியலைப் பற்றியும், சராசரி மனிதனின் நடத்தைப் போக்கையும் எத்தி வைக்கின்ற அற்புதமான தொகுதிகளில் ஒன்று. வாழ்க்கை கற்றுத் தருகின்ற பாடங்களில் ஒவ்வொன்றும் சொல்லொண்ணா துயரங்களையும், சின்னச் சின்ன மகிழ்ச்சியையும் கற்றுத் தருபவை என்பதையே எழுத்தாளர் எம்.எம். நௌஷாத் தனது சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் வெளிக் கொணர முனைந்துள்ள வாழ்வியல் சாரம்சமாகும்.

எம்.எம். நௌஷாத் அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால்,  சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு வைத்தியராவார். இதுவரை சொர்க்கபுரிச் சங்கதி, பூச்செண்டு போல் ஒரு மனிதன் என்று இரண்டு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சொர்க்கபுரிச் சங்கதி அரச சாகித்ய விருது, கிழக்கு மாகாண இலக்கிய விருது மற்றும் கொடகே முதல் நூல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இவருடைய சிறுகதைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளில் ஒன்றான 'அலங்காரப் பதுமை அரண்மனையில் பாட இருக்கிறாள்' என்ற கதை எலோரா என்ற சிறுமியை மையப்படுத்தியதாக நகர்கிறது. அந்த சிறுமி சாதாரண குழந்தைகளைப் போலன்றி வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்ட சிறப்பு மிக்கவள். எந்தளவுக்கு சிறப்பு மிக்க பெண் என்றால் அவள் ஒரு தேவதை. அவளுக்கென சில விஷேட குணாதிசயங்கள் உண்டு. அவள் அரண்மனையில் பாட்டுப்  பாடுகின்றவள். அத்தோடு கதைகளும் சொல்பவள். 

அவளுடைய கதையை கேட்க ஊரிலுள்ள சிறுவர், சிறுமிகள் எல்லோரும் வட்டமிட்டு ஆராவாரம் செய்வார்கள். தேவதை, ராணி, கதைப் பாட்டி, கடல் குதிரை, அரண்மனை வாழ்க்கை, ராணியுடனான நட்பு என எலோரா சொல்கின்ற அத்தனை விடயங்களும் கேட்டுக் கொண்டிருப்பவர்களின் காதுகளையும், கண்களையும் அகல திறக்க வைக்கின்றன.

இப்படி இந்த கதையின் நகர்வினைப் பார்க்கின்ற போது  உண்மையில் இப்படியெல்லாம் இருக்கின்றதா? அல்லது இதெல்லாம் எலோராவின் கற்பனையா என்பதை நிகழ்நிலையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் எம்.எம். நௌஷாத். கதையின் நகர்வு ஆரம்பத்தில் மிகப் பெரிய பிரம்மாண்டத்தை எமக்குள் உட்செலுத்தி நகர்ந்த போதிலும் இக்கதையின் ஒட்டு மொத்த சேர்க்கையும் மனிதனை உளவியல் ரீதியாக மீட்டெடுப்பதற்கான ஓர் வழி முறையேயாகும்.

எலோரா என்ற சிறுமி இப்படி அதீத கற்பனைகளின் பின்னால் உட்கார்ந்து பிரம்மை பிடித்து அலைவதற்கான காரணம் என்னவென்பதை இக்கதையினூடாக எழுத்தாளர் தெளிவுறுத்தியிருக்கிறார். அத்தோடு இவளுடைய விடயத்தில் தாய், தந்தையின் வகிபங்கு என்ன என்பதையும் இக்கதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

எல்லாமே ஒரு கட்டத்தில் மாறி, கற்பனையின் உச்சத்தில் திளைத்த எலோரா ஒரு தடவை காணாமல் போகிறாள். அப்படி காணாமல்  போன பின்னர் அது பற்றிய தனது அவதானத்தை செலுத்த எலோராவின் வீடு வந்திருந்த மனோ தத்துவ நிபுணர் ஸில்வியா வீட்டை சுற்றிப் பார்க்கிறாள். அங்கு எலோரா தூங்கும் இடம், படிக்கும் அறை, பாடப்புத்தகங்களை வைக்கும் இடம், அறைக்குள் நுழைகின்ற வெளிச்சத்தின் அளவு, காற்றோட்டம் தொடர்பான ஆய்வு, உணவுப் பழக்க வழக்கங்கள், ஆடை போன்றவற்றை ஆய்வு செய்து குறிப்பெடுத்து அவரே எலோராவின் உண்மை நிலையை இக்கதையில் ஒப்புவிக்கிறார். 

இறுதியாக தொலைந்தவளை ஒவ்வொருவராக தேடிச் செல்கையில், என்ன நேர்ந்தது என்பதுதான் கதை. உண்மையில் உளவியல் ரீதியிலான விடயங்களை மையப்படுத்தியதாய் கதையின் களம் அமைந்திருக்கிற்து.வெறுமனே சிறுகதையாக வாசிக் கடப்பதைக் காட்டிலும் வாழ்க்கைக்கு தேவையான பல விடயங்களை எழுத்தாளர் எம்.எம். நௌஷாத் 'பூச்செண்டு போல் ஒரு மனிதன்' தொகுதியினுடாக  நிறைத்திருக்கிறார்.

அதே போன்று இச்சிறுகதைத் தொகுதியின் பிரதான தலைப்பான 'பூச்செண்டுகளால் ஒரு மனிதன்' என்ற  சிறுகதையும் இத்தொகுதியின் 312 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.  இச்சிறுகதை இல்லற வாழ்வை மையப்படுத்தியதாக எழுதப்பட்டுள்ளது.மனிதர்கள் மனிதர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். விட்டுக் கொடுப்பும் பரஸ்பர அன்புமே வாழ்க்கையின் பினைப்பை பலப்படுத்தும். அப்படியான பினைப்பில் திருமணமாகி இல்லற வாழ்வில் இணைய விரும்பிய இரண்டு தம்பதிகளுக்கிடையில் மிகப்பெரும் பிரிவினையுடனான வேறுபாடு வந்தால் என்ன செய்வதென்று புரியாத குழப்பம் தோன்றும்.

பூக்களையும் புத்தகங்களையும் நேசிக்கின்ற ஒருவனுக்கும், அதே நேரத்தில் பூக்களையும் புத்தகங்களையும் வெறுக்கின்ற ஒருத்திக்குமிடையில் பினைப்பு ஏற்பட்டு அவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்குமென்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். 

ஹிமி கிலாடன் - டெர்ரி கில் போர்ட் என்ற இருவர் தம்பதிகளாக அத்தனை விடயங்களையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு திருமணம் செய்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டு பயணிக்கையில் இருவருக்குமிடையிலான தேர்வும், விருப்பப்பாடும், தான் நேசிக்கின்ற விடயத்தை இன்னொருவர் வெறுக்கின்ற போது நிகழ்கின்ற போக்குகள் பற்றியும் அதனால் வெளிப்படுகின்ற குழப்பங்கள் பற்றியும் 'பூச்செண்டுகளால் ஒரு மனிதன்' சிறுகதை முழுக்க முழுக்க  விபரிக்கின்றது.  

ஒரு கட்டத்தில் கணவன் நேசிப்பதையே மனைவியும் நேசிப்பது சிறந்தது. அதுவே மனைவி என்பவள் கணவனுக்கு செலுத்தும் மிகப்பெரும் உபகாரம் எனக் கருதிய மனைவி முதன் முறையாக கணவனின் நூலகத்துக்குள் நுழைகிறாள். தனது கணவன் அடுக்கி வைக்கும் புத்தங்கங்களைப் பார்த்து பிரம்மித்துப் போகிறாள். தானும் புத்தகங்களை நேசிப்பதாகவும் தனக்கும் படிக்க ஏதாவது புத்தகங்களை தருமாறும் கேட்கிறாள். என்றாலும், இங்குள்ள புத்தகங்கள் விசித்திரமானவையென்றும் அதனை படிக்க ஒரு மனமும் சூழலும் இடம் கொடுக்க வேண்டும் என்றும் கணவன் விபரிக்கிறான்.  

உன்னால் அது முடியாது என மறுத்தாலும் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு செல்கிறாள்  ஹிமி கிலாடன். அதனை படித்தவள் நிம்மதியிழந்ததை கணவன் புரிந்து கொண்டு, அவளை திருப்திபடுத்த வேறு ஒரு புத்தகத்தை கொடுத்தான். இதன் பின்னர் அவள் ஏன் மனோநிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டது  என்பதே  கதையின் திருப்புமுனையாக நீள்கிறது.

இறுதியாக வௌ;வேறு சந்தர்ப்பங்களில் எடுத்த முடிவுகளில் சரியான ஆதரவின்மையால் ஒரு கட்டத்தில் சில விபரீதங்களால் இறந்து போகிறாள் ஹிமி கிலாடன். அது வழக்காக நீள்கிறது. என்றாலும், கணவன் மனைவியை எந்தளவு புரிந்து வைத்திருக்கிறான்.

மனைவி கணவனை எந்தளவு புரிந்து வைத்திருக்கிறாள், தம்பதிகளாக இல்லற வாழ்வை எப்படி வாழ வேண்டுமென்பதையெல்லாம் எழுத்தாளர் எம்.எம். நௌஷாத் இச்சிறுகதையினூடாக சொல்லியிருப்பது எமக்கு மிகப் பெரும் படிப்பினைகள். மனிதனின் வாழ்க்கை ஆயிரம் பூச்செண்டுகளால் ஆனது. அதனை வாடாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவருடைய மிகப் பெரும் பொறுப்பு என்பதை எழுத்தாளர் எம்.எம். நௌஷாத் மிக அற்புதமாக தனது தொகுதியினூடாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.

அதே போல் 'ஆபிரிக்காவின் சாம்பல் கிளி என்பது ஒரு செல்லப் பிராணியே' என்ற சிறுகதை தந்தை, பிள்ளைகள்;, சில செல்லப் பிராணிகளை பிரதான பாத்திரமாகக் கொண்டு ஜீவகாருண்யம் மற்றும் பாசப்பிணைப்பை பற்றி பேசுகின்றது. ஒரு தந்தை தன்னுடைய பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதில் தாய்கு நிகராகவே பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றார். 

ஆனபோதிலும், தாயை இழந்த தனது பிள்ளைகளுக்கு தந்தையாகவும்,  தாயாகவும் இருந்து கவனிக்கின்ற ஓர் ஆண் மகன் தனது ஒட்டு மொத்த அன்பையும் பிள்ளைகள் மீது செலுத்துகின்ற போதும், அதே அன்பை பல பிள்ளைகள் பெற்றோர் மீது செலுத்த தவறி விடுகின்றனர் என்பதே உண்மையாகும்.

இக்கதையில் சொல்லப்படும் தந்தை தபுதாரனாக தனது பிள்ளைகளை அன்றாடம் குளிப்பாட்டி, பாடசாலைக்கு அனுப்பி வைப்பதை வாடிக்கையாக்கியிருக்கிறார். மகன் ஆசைப்பட்டதால் வெளியூரில் படிப்பதற்காக அனுப்பி வைத்த பின்னர் அவன் 'பணம் தேவை' என்று வீடு வந்து சேருகின்ற வெறுமனே இரண்ட சொற்களை மட்டும் கொண்ட அந்தக் கடிதத்துக்கு முண்டியடித்துக் கொண்டு பணம் அனுப்புகின்ற சராசரி தந்தையின்  நிகழ்நிலை காட்சி கண் முன்னே வந்து செல்கின்றது. 

தாய் இல்லையென்பதால் பிள்ளைகளுக்கு நிறைய கதைகள் சொல்லி உறங்க வைப்பதிலும் அதீத கரிசணை கொண்ட தந்தை, தனது மகனை திருப்திப்படுத்த வேண்டிய வசதிகளைச் செய்து மகனின் அறையை மாளிகை என்று சொல்லி வைத்திருந்தார். 

என்றாலும், நினைத்தவுடன் திரும்பி வர முடியாத தூரத்துக்கு போய் திருமணம் முடித்து வாழ்கின்ற தனது மகன், தான் வாழ்ந்த வீட்டை நரகமென்றும் புகுந்த வீட்டை சுவர்க்கம் என்றும் கருதுவதும் வழமையான வாடிக்கைதான். ஆனால், காலவோட்டத்தில் அது எவ்வளவு பொய் என்பதை அவன் உணர்ந்து கொள்வான் என்பதை இக்கதை புலப்படுத்தி நிற்கிறது. இப்போது தந்தையின் பாசமும் அரவணைப்பும் புரிந்தவனாக தனது தந்தையின் புகைப்படத்தை தன் வீட்டில் மாட்டி வைத்து நினைத்துப் பார்க்கிறான் மகன். தந்தையுடன் மகனும் அவனுடைய அக்காவும் வாழ்ந்த போது, தந்தை சாம்பல் நிற ஆபிரிக்க கிளியொன்றை வளர்த்து வந்தார். 

அதனுடனேயே அதிக காலங்களை செலவிட்டார். மகள் திருமணமாகி கணவனுடன் சென்று விட்டாள். மகனும் படிப்புக்காக சென்றவன் அப்படியே திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து விட்டான். இதனால் பிள்ளைகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த தந்தை மனவுளைச்சலுக்கு ஆளாகியிருப்பதை கதை பறை சாட்டுகிறது.

சில துரோகங்கள், அக்கறை, பரிவு, ஜீவகாருண்யம், அன்பு, தனிமை என கதையின் பாகம் பிரிந்து செல்கின்றது. என்னதான் நாம் உறவுகளை விட்டு தூரச் சென்றாலும் சில வலிகளும், முதுமையும், தனிமையும் நாம் இழந்த உறவுகளையும் மீண்டும் கண்ணில் கொண்டு வரும் என்பதை வலியோடு உணர்த்துகிறது இக்கதை. 

தந்தை இருந்த போது இல்லாத மகன், தந்தை இல்லாத போது தந்தையை தேடுகிறான். இறுதியில் தான் வளர்த்த சாம்பல் நிற ஆபிரிக்க கிளியும் இறந்து போகவே அது காணாமல் போனதாக எண்ணி மகனுக்கு தந்தை எழுதிய கடிதம் 10 வருடங்களின் பின்னர் கிடைக்கிறது. 

இந்த 10 வருட இடைவெளி மகனுக்கும் தந்தைக்கும் இடையிலான பிரிவினையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. தேவையான நேரத்தில் வழங்கப்படுகின்ற அக்கறையே பலம் மிக்கது. அதனை அடுத்தவருக்கு கொடுத்து மகிழ்வதே பெரும் மகிழ்ச்சியை தரும் என்பதை  இக்கதையினூடாக சிறுகதையாசிரியர் எம்.எம். நௌஸாத் எமக்கு உணர்த்தியிருக்கிறார். ஒருவர் இருக்கின்ற போது காட்டப்படாமல் விட்டு விட்டு, இல்லாத போது காட்டப்படுவதாக பாசாங்கு செய்யப்படுகின்ற அன்பில் எந்தப் பலனுமில்லை. 

இதே போல  'சித்திரக்காரன் இறுதிவரை உண்மையை மறைத்தான்' என்ற சிறுகதை ஒரு விடயத்தை துப்பறிய முற்படுவதையும், சிக்கியிருக்கின்ற சில முடிச்சுக்களை அவிழ்க்கவும் முற்படுகின்றன. மூன்று வௌ;வேறு மரங்களில் மூன்று மனித உடல்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. சம்பவ இடத்துக்கு விரைந்த குற்றப் புலனாய்வு அதிகாரி திருமதி புளோரியாவுக்கு மூன்று ஓவியங்களை தவிர எந்த சாட்சியமும் கிடைக்கவில்லை. 

ஒரு புகைப்படக்காரன் ஒரு காட்சியை புகைப்படம் எடுத்தால் எப்படி காட்சிகள் யதார்த்தம் பிசகாமல் இருக்குமோ அதனைப் போன்றே இந்த ஓவியமும் மரணக் காட்சிகளை தத்ரூபமாக காட்டிக் கொண்டிருந்தன.

மனிதன் ஒவ்வொரு செயலையும் செய்வதற்காகவே பணிக்கப்பட்டுள்ளான். அவை ஒவ்வொன்றையும் தான் உருவாக்கிக் கொள்கின்ற ஒன்றாகவோ அல்லது விதியின் தலையில் ஒப்படைத்து நகர்கின்ற ஒருவனாகவோ அத்தருணத்தில் அவன் செயற்படுகின்றான் எனலாம். ஓர் ஓவியனுக்கு இந்த உலகத்தில் சிறந்த ஓவியங்களை வரைந்து விடுவதை தவிர வேறு என்ன  பணி இருந்து விட முடியும்? அவன் வரைகின்ற ஓவியங்களின் தத்ரூபம் கண்முன்னே காட்சியாக மிளிர்கின்ற போது ஒவ்வொருவரும் தனது கண்களை அகல விரித்துப் பார்ப்பார்கள். இப்படி ஓவியத்தில் ஈடுபாடு கொண்டு ஓவியம் வரைபவள் பியூரி கென்ஸா என்ற பெண். 

புளோரியா ஓவியத்தின் சொந்தக்காரியை சந்தித்து பேசும் போது, அந்த ஓவியத்தை அவளே வரைந்ததாக ஒப்புக் கொள்கிறாள். இப்படி ஏகப்பட்ட கதைகளை பேசிக் கொண்டிருக்கையில் தான் ஒரு புலனாய்வு அதிகாரி என்பதையும் மறந்து அவள் அவளுடைய கதைகளை நம்புகிறாள். ஆனால், அந்த மூவரும் ஏன் இறந்தார்கள் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் திணறவே செய்தாள். 

கொலை செய்ததற்கான அடையாளமோ, அல்லது நஞ்சூட்டப்பட்டதற்கான அடையாளமோ, வேறு அடையாளமோ என எதுவுமே கிடைக்கவில்லை. இறுதியாக அவிழ்கின்ற மர்ம்ங்கள்தான் இக்கதையை மாற்றியமைக்கின்ற ஒன்றாக வெளிப்படுகின்றது. ஓர் ஓவியராக பியூரி கென்ஸா எப்படி வெற்றி பெற்றவளாக இச்சிறுகதையின் முடிவில் காட்டப்படுகிறாளோ, அதைப் போலவே தூக்கிட்டு மரணித்த மூவரும் இரசிகர்களாக மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்பதை இக்கதை உணர்த்துகிறது.

நாம் ஒரு விடயத்தில் நாட்டம் கொள்கின்ற போது, அதன்; மீதான அளவு கடந்த காதலால் நாம் கட்டிப் போடப்படுகின்றோம். இலகுவில் வெளிவர முடியாத ஒன்றாக அல்லது ஒருவராக நாம் மாறி விடுகிறோம். மனித வாழ்க்கையில் இதற்குரிய எத்தனையோ அத்தாட்சிகள் பரவிக் கிடக்கின்றன. எனவே ஈர்ப்பின் மீது கட்டுப்பட்டு அவிழ்க்க முடியாத சில வினாக்களுக்கு விடை கொடுப்பதாக இச்சிறுகதை அமைந்துள்ளது எனலாம். 

அவன் ஏன் நரமாமிச பட்சனியாக மாறினான்?' என்ற சிறுகதை ஒரு சுயாதீன ஊடகவியலாளன் ஒரு கிராமத்துக்குள் நுழைவதிலிருந்து கதை ஆரம்பமாகின்றது. பர்மிங்ஹாம் நகரிலிருந்து வெளிவரும்  சஞ்சிகையில் சுயாதீன ஊடகவியளாராக பணி புரியும் ஸிம்மி துஷானி 'மறைந்திருக்கும் உலகக் கிராமங்கள்' என்ற தலைப்பில் நீண்ட தொடரை ஆராய்ச்சி செய்து எழுதி வருகிறார். அப்படியொரு கட்டுரைக்காக யாரும் போகாத, போக வேண்டாமென தடுத்த கிராமத்துக்குள் தனது பேனாக்களோடு புறப்பட்டு விட்டார்.

ஒரு பக்கம் காட்டுப் பாதை. எப்போது வேண்டுமானாலும் கொடிய மிருகங்கள் எதுவும் தாக்கி விடலாம் என்ற அச்சம். இன்னொரு பக்கம் அக்கிராமத்தில் அவருக்கான உபசரிப்பு என்ற மெல்லிய கோட்டுக்கிடையில் கதை நகர்கிறது. கிராமவாசிகள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக அங்கு வாழ்ந்து பெரும் ஆடல், பாடல்  என அவர்களின் வாழ்க்கை அந்தக் கிராமத்தில் திளைத்துப் போயிருக்கிறது. 

கதையின் பிரதான பாத்திரமான ஸிம்மி துஷானிக்கு அங்கு சிலோமியா என்ற பெண்ணின் நட்பு கிடைத்த பின்னர்  ஸிம்மி துஷானிசியிடம் நொசுமி தனது கிராமத்தைப் பற்றி அறியக் கிடைக்கிறது. வானவில் கிராமத்தில் காண்கின்ற பிம்பங்கள் எல்லாம் போலியானவை. அங்கு வாழ்கின்ற மக்கள் பைத்தியம் முற்றியவர்களாக அழைந்து திரிகிறார்கள். அதற்கான காரணம் அந்த கிராமத்தில் வாழ்ந்த ஒருவனுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மூளையின் முன்பகுதி மோசமாக சேதத்துக்குள்ளாகியதால் அவனுடைய பரம்பரையில் வந்தவர்கள் அத்தனை பேரும் பைத்தியக்காரர்களைப் போன்று நடக்க ஆரம்பித்து விட்டார்கள். 

அப்படி பைத்தியமாக்கப்பட்டவர்களே வானவில் கிராமத்தில் வசிக்கிறார்கள். இப்பேற்பட்ட முட்டாள்களை பேசி என்ன பயன் என நொசுமி கேட்கிறாள். இப்படியாக தொடர்கின்ற கதையில் ஏகப்பட்ட அவிழ்க்க முடியாத சிக்கல்கள். இப்படி அந்த கிராமத்தில் உள்ள இருண்மையை முடிவுக்கு கொண்டு வரப் போராடுகின்ற ஊடகவியலாளன் எதனை வெளிப்படுத்துகிறான் என்பதுதும், சில வியப்பான விடயங்களுமே கதையின் சாரம்சமாகும். 

அதே போன்று 108 ஆம் பக்கத்தில் 'திகிலுறச் செய்யும் இரட்டைத் தலைச் சர்ப்பம்' என்ற சிறுகதை அமைந்துள்ளது. அமானுஷ்யங்களின் பிரதி பிம்பமாய் வெளிப்படுகின்ற இச்சிறுகதையில் நிறைந்திருக்கும் உளவியல் சற்றே வித்தியாசமானதாக இருக்கிறது. அளவுக்கு மீறி சம்பாதித்து, அதனை செலவளிப்பதைக் காட்டிலும் பாதுகாப்பதே பெரும் பிரச்சினையாகி விடுகின்றது  பணக்காரர்களுக்கு. அப்படி அளவுக்கதிகமாக பணம் சம்பாதித்த பின்னர அதனை பாதுகாப்பதற்காக மேற்கொள்கின்ற பிரயத்தனம், அதே நேரத்தில் ஊதாரித்தனங்கள் இக்கதையில் வெளிப்படுகின்றது. 

நீண்ட காலமாக திரையரங்கம் ஒன்றை நடத்தி வரும் கிலேன்ஸ் அல்பேர்ட் தன்னுடைய சொந்த தொழில் நிலத்தில் இரட்டை தலை சர்ப்பத்தை கண்டதாக சொன்னதையடுத்து அதனை பிடிக்க போராடுகின்ற பிரயத்தனங்கள் தன் மனைவிக்கு பண்ணையின் மீதுள்ள விருப்பை இல்லாமல் செய்வதற்கான யுக்தியாக கையாளப்படுவதாக இக்கதையில் வெளிப்படுகிறது. பாம்பு என்று எல்லோரையும் பயம் காட்டி திகிலுறச் செய்தாலும் பாம்பை பிடிப்பதற்காக மேற்கொண்ட பெரும் முயற்சிகள் இக்கதையில் முடிவை முடிச்சவிழ்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது. 

இக்கதையின் இன்னொரு பாகமாக தனது மனைவி தன் மீது காதல் வைத்திருக்கிறாளா என்ற கணவனின் சந்தேகங்களும், அதனைப் போன்றே மனைவியும் தனது கணவனிடம் தன் மீது காதல் கொண்டிருக்கிறாயா எனக்  கேட்பதும் வாழ்வின் மிக முக்கிய விடயமாக இக்கதையில் எமக்கு உணர்த்தப்படுகின்ற மிகப் பெரிய செய்தியாக இருக்கின்றது.  

'திகிலுறச் செய்யும் இரட்டைத் தலைச் சர்ப்பம்' என்ற  இச்சிறுகதை வாழ்வில் மிக முக்கிய விடயங்களை நிகழ்நிலையில் சுட்டிக் காட்டுவதாகவும், கணவன் மனைவி பரஸ்பர அன்பை வெளிப்படுத்துவதாகவும், வாழ்வில  இல்லாத ஒன்றையெண்ணி பிரம்மை கொள்வதன் நிலையையும் வௌ;வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, பூச்செண்டு போல் ஒரு மனிதன் சிறுகதை தொகுதியின் ஆசிரியர் எம்.எம். நௌஸாத் அவர்களுடைய கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விடயங்களைப் பேசினாலும்கூட, இச்சிறுகதையிலுள்ள ஒவ்வொரு கதைகளையும் நான் வாழ்க்கைக்கு அடிப்படையான விடயங்களை நிகழ்நிலையில் கற்றுத் தருகின்ற பாடங்களாகவே காண்கின்றேன். எம்.எம். நௌஷாத் அவர்களுக்கு  ஆயிரம் பூச்செண்டுகளை அள்ளிக் கோர்த்து எனது வாழ்த்துகளைப் பரிசளிக்கிறேன். 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe