Ads Area

காரைதீவுக்கிராமத்தின் இருப்பைக் கபளீகரம் செய்யும் மாவடிப்பள்ளி-கல்முனை கார்ப்பட் வீதியை உடனடியாக நிறுத்துங்கள்!

 (வி.ரி.சகாதேவராஜா)

முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த பழம்பெரும் காரைதீவு தமிழ்க்கிராமத்தின் இருப்பை  கபளீகரம் செய்யும், மாவடிப்பள்ளி – கல்முனை வயலோர கார்ப்பட்வீதியை உடனடியாக நிறுத்துங்கள்.

இவ்வாறு காரைதீவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், பொதுஅமைப்புகள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளன.

ஜனாதிபதி தொடக்கம் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் வரை இதற்கான எதிர்ப்பு மகஜர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைப்புகளின்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாடு காரைதீவு விபுலாநந்தர் கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர் இரா.குணசிங்கம் ,செயலாளர் சி.நந்தேஸ்வரன் ,காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில்:

காரைதீவின் மேற்கேயுள்ள நன்செய் நிலப்பிரதேசத்தில் இன்றைய கொரோனா காலகட்டத்தில், யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் கார்ப்பட்வீதியையிட்டு   காரைதீவு மக்கள் அதிர்வடைந்து கொதித்தநிலையிலுள்ளனர்.

சௌபாக்ய  திட்டத்தின்கீழ் 1லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்திசெய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் ,காரைதீவு எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளியிலிருந்து வயல் பிரதேசத்தினூடாக கல்முனை வரையுள்ள 5கிலோமீற்றர் நீள அணைக்கட்டு வீதியை கார்ப்பட் வீதியாக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இங்குள்ள 900ஏக்கர் வயல்நிலங்கள் பாதிப்படையவுள்ளன.

காரைதீவு மேற்குப்பிரதேச வயல் காணிகளுக்குத் தேவையான தண்ணீர்பெறும் வசதிகொண்ட இந் நன்செய் நிலப்பிரதேசம் இவ்வாறு கார்ப்பட்வீதிக்காக பயன்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் விவசாயிகள் பாதிப்படைவதோடு ஊருணியில் வெள்ளம் தேங்கி ,கிராமத்திற்கு பாரிய வெள்ளஅபாயத்தை தோற்றுவிக்கும் துரதிஸ்டநிலை உருவாகும் . பிரதானவீதி சிறப்பாக இருக்கும்போது ,குடிமனைகள் குடியிருப்புகள் ஒன்றும் இல்லாத இந்த விவசாய வீதியை திடுதிப்பென கார்ப்பட் வீதியாக்க வேண்டிய தேவை என்ன?

குறித்த வயல் சார்ந்த நன்செய் நிலத்தை காரைதீவு பிரதேசசெயலகம் காணி மீட்பு திணைக்களத்திற்கு பிரகடனப்படுத்த சிபார்சு செய்திருந்தது.

வீதி அபிவிருத்திஅதிகாரசபையின் பாரியதிட்டத்தின்கீழ் இவ்வீதி மக்களது அபிப்பிராயம் கோரப்படாது ,காரைதீவு பிரதேச செயலாளர் மற்றும் தவிசாளரிடம் எந்த அனுமதியையோ கலந்துரையாடலையோ செய்யாமல் விவசாயிகளுக்கு தீங்கிழைக்கக்கூடிய இவ்வீதிஅமைப்பதை நாம் முற்றாக எதிர்க்கிறோம்.

குறித்த காணிஅமைந்துள்ள நீர்ப்பாசனத்திணைக்கள பிராந்திய பொறியியலாளரிடமும் எந்த அனுமதியையும்பெறாமல் இவ்வீதி அமைக்கப்படுவது குறித்து திரைமறைவில் ஏதோ சதி இருப்பதாக மக்கள் உணருகின்றனர்.

கல்முனையில் கடந்தவருடம் ஆரம்பித்தபோது பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதனால் அதனை நைசாக கைவிட்டு இப்போது தன் தென்முனையிலுள்ள காரைதீவிலிருந்து ஆரம்பித்துள்ளார்கள். 

கடந்தகால அனுபவத்தை வைத்துப்பார்க்கின்றபோது இதனை திட்டமிட்ட சதிவேலையாகவே பார்க்கிறோம். எனவே இச்சதி வலையிலிருந்து காரைதீவு தமிழ்க்கிராமத்தை மீட்க ஜனாதிபதி தொடக்கம்  அரசியல்வாதிகளும் ,அதிகாரிகளும் உதவவேண்டும் என காரைதீவு தமிழ்மக்கள் வேண்டுகின்றார்கள்.  இவ்வாறு அங்கு தெரிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் ஜனவரியில் இத்திட்டம் கல்முனையிலிருந்து ஆரம்பிக்கப்படவிருந்தபோது அங்குள்ள பௌத்தமதகுரு வண.சங்கரத்ன தேரர் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்ட தமிழ்பிரமுகர்களின்எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டமை தெரிந்ததே.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe