தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்டு இருக்கும் வன்முறைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐ தாண்டியுள்ளது. உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக அங்குள்ள கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்களை சூறையாடும் நிகழ்வுகள் கடந்த 4 நாட்களாக தொடர்கின்றன. தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜுமா தனது ஆட்சி காலத்தில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா முழுவதுமாக வன்முறை வெடித்தது.
கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் என தென் ஆப்பிரிக்காவே வன்முறை களமாக மாறியுள்ளது.ஜேக்கப் ஜுமா ஆதரவாளர்களின் போராட்டத்தில் தென் ஆப்ரிக்காவில் உணவு, குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு மற்றும் குடிநீருக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் உணவு மற்றும் குடிநீருக்காக அங்குள்ள கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்களை சூறையாடும் நிகழ்வுகள் கடந்த 4 நாட்களாக தொடர்கிறது. மிகப்பெரிய ஷாப்பிங் மால்களுக்குள் புகுந்த மக்கள், அங்குள்ள பொருட்களை சூறையாடி எடுத்துச் செல்வதுடன் மால்களுக்கு தீ வைத்து செல்வதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மால்களை காக்க அதன் உரிமையாளர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.இந்த வன்முறையால் இதுவரை 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.பலர் உணவுக்காக ஷாப்பிங் மால்களில் குவியும் போது ஏற்படும் நெரிசலில் சிக்கி உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.வன்முறைக்கு காரணமான ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது. வன்முறைகளுக்கு எந்த காரணத்தை கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ராமோசா கூறி இருக்கிறார்.